Skip to main content

"நாம் பேசிய உண்மைகள் அவர்களது மனசாட்சியை அசைத்துப் பார்க்கிறது" - ஜெய் பீம் இயக்குநர் பேச்சு

Published on 05/01/2022 | Edited on 05/01/2022

 

TJ Gnanavel

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சென்னை மாவட்ட குழு சார்பில் ஜெய்பீம் கலைஞர்கள் மற்றும் களப்போராளிகளைப் பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது. 

 

விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் த.செ.ஞானவேல் பேசுகையில், "இந்தப் படத்தின் கரு உருவாகுவதற்கு காரணமாக இருந்த மிக முக்கியமான புள்ளியைச் சார்ந்த இயக்கத்தின் சார்பாக எங்களுக்கு பாராட்டு விழா என்பதால் இந்த மேடை எங்களுக்கு மிகவும் முக்கியமான மேடை. மிக்க நன்றியோடு இந்த மேடையில் நாங்கள் நிற்கிறோம். கலை கலைக்கானது மட்டுமல்ல; மக்களுக்கானதும் என்பதை என் மனதில் ஏற்றிக்கொள்ள நிறைய இடதுசாரி சிந்தனையாளர்களின் எழுத்துகள் எனக்கு துணை செய்துள்ளன. கம்யூனிச இயக்கங்களின் போராட்டத்தை படமாக்க வேண்டும் என்று நினைத்தெல்லாம் ஜெய் பீம் படத்தின் கதையை நான் எழுதவில்லை. அது என் நோக்கமும் அல்ல. பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை பற்றி நான் எழுதும்போது அங்கே இடதுசாரி இயக்கங்கள் வந்து நிற்கின்றன என்பதுதான் அவர்களுக்கு உள்ள சிறப்பே. ஒரு பார்வதி குறித்தோ, ஒரு ராஜாக்கண்ணு குறித்தோ நான் பேசவில்லை. தமிழகம் முழுவதும் 60 இருளர் கிராமங்களுக்கு சென்றேன். அங்கே ஏகப்பட்ட பார்வதிகளும் ராஜாக்கண்ணுகளும் இருக்கிறார்கள். 

 

ஜெய் பீம் என்ற முழக்கம் மானுட சுதந்திரத்தின் அடிமை முறைக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிரான முழக்கமாக தென்பட்டது. அதனால்தான் இந்தப் படத்திற்கு அந்தப் பெயரை வைத்தேன். கருப்பு, சிவப்பு, நீலம் என மூன்று நிறங்கள் செயல்பட்டால் மட்டுமே இந்தியாவை மீட்க முடியும்; இந்தியாவை ஜனநாயக நாடாக மாற்ற முடியும் என்பதில் எனக்கு வலுவான நம்பிக்கை உண்டு. இந்தப் படத்தில் உண்மையை பேசவில்லை என ஒரு விமர்சனம் இருக்கிறது. இங்கு பிரச்சனையே உண்மையை பேசியதுதான். நாம் பேசிய உண்மைகள் அவர்களது மனசாட்சியை அசைத்துப் பார்க்கிறது. உண்மை என்பது விதைபோல. அதை நீங்கள் மண் போட்டு மூட முடியாது. அது என்றைக்காக இருந்தாலும் முளைத்து வெளியே வரும்" எனப் பேசினார்.    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” - ஜெய் பீம் இயக்குநர் வேண்டுகோள்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Jai Bhim director plea to Vote for India Alliance in election 2024

18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட சில கட்சிகள் இந்தியா கூட்டணியிலும் பா.ஜ.க, பா.ம.க, த.மா.கா உள்ளிட்ட சில கட்சிகள் என்.டி.ஏ கூட்டணியிலும் அ.தி.மு.க, தே.மு.தி.க தனிக்கூட்டணியிலும் நாம் தமிழர் கட்சி தனித்தும், தேர்தலில் களம் காண்கின்றனர்.  

இந்த நிலையில் திரைப் பிரபலங்களும் வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் பேசி வருகின்றனர். ஏற்கெனவே விஜய் சேதுபதி, “நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும். காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது” என விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருந்தார். 

பின்பு விஜய் ஆண்டனியும் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் அனைத்திலும் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என கூறி வந்தார். இவர்களை தொடர்ந்து இயக்குநர் த.செ ஞானவேல், “வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை” என அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் பகிர்ந்துள்ள செய்திக் குறிப்பில், “வருங்கால தலைமுறையினருக்கு வெறுப்பு நிலவாத, சக இந்தியர்களின் தனித்துவத்தை மதிக்கிற பாதுகாப்பான சூழலை அமைத்து தருவது நமது தார்மீக கடமை. இந்தியா கூட்டணி கட்சிகளின் வாக்குறுதிகள் சமூக நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் காப்பாற்றும் என்கிற நம்பிக்கை அளிக்கின்றன.

மாநில உரிமை, மொழி உரிமை, கருத்து உரிமை, கல்வி உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதும், காத்துக் கொள்வதும் அவசியம். அதன் அடிப்படையில் தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளடக்கிய இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி நானறிந்த, என்னை அறிந்த அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

Next Story

‘குறி வச்சா இரை விழணும்...’ - வேட்டையனாக வரும் ரஜினி

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
thalaivar 170 title released

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனது 170வது படத்திற்கு த.செ. ஞானவேலுடன் கூட்டணி வைத்துள்ளார் ரஜினி. லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. 

இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் தொடங்கி திருநெல்வேலி, கன்னியாகுமரி, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இது தொடர்பான வீடியோக்கள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. 

இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் ரஜினி. இந்த நிலையில், ரஜினி தனது 73வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ‘வேட்டையன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் டீசரில் போலீஸ் கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். ‘குறி வச்சா இரை விழணும்...’ என ரஜினி பேசும் வசனம் ரசிக்க வைக்கிறது. இந்த டீசர் தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.