18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட சில கட்சிகள் இந்தியா கூட்டணியிலும் பா.ஜ.க, பா.ம.க, த.மா.கா உள்ளிட்ட சில கட்சிகள் என்.டி.ஏ கூட்டணியிலும் அ.தி.மு.க, தே.மு.தி.க தனிக்கூட்டணியிலும் நாம் தமிழர் கட்சி தனித்தும், தேர்தலில் களம் காண்கின்றனர்.
இந்த நிலையில் திரைப் பிரபலங்களும் வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் பேசி வருகின்றனர். ஏற்கெனவே விஜய் சேதுபதி, “நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும். காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது” என விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
பின்பு விஜய் ஆண்டனியும் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் அனைத்திலும் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என கூறி வந்தார். இவர்களை தொடர்ந்து இயக்குநர் த.செ ஞானவேல், “வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை” என அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் பகிர்ந்துள்ள செய்திக் குறிப்பில், “வருங்கால தலைமுறையினருக்கு வெறுப்பு நிலவாத, சக இந்தியர்களின் தனித்துவத்தை மதிக்கிற பாதுகாப்பான சூழலை அமைத்து தருவது நமது தார்மீக கடமை. இந்தியா கூட்டணி கட்சிகளின் வாக்குறுதிகள் சமூக நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் காப்பாற்றும் என்கிற நம்பிக்கை அளிக்கின்றன.
மாநில உரிமை, மொழி உரிமை, கருத்து உரிமை, கல்வி உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதும், காத்துக் கொள்வதும் அவசியம். அதன் அடிப்படையில் தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளடக்கிய இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி நானறிந்த, என்னை அறிந்த அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை. pic.twitter.com/XlJHMZOqiI— Gnanavel (@tjgnan) April 17, 2024