Skip to main content

மீண்டும் ஒரு ஆஸ்கர் கனவு... இறுதி பட்டியலில் இந்திய ஆவணப்படம்!

Published on 09/02/2022 | Edited on 09/02/2022

 

Indian documentary Writing with Fire nominated Best Documentary Feature oscar2022

 

உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டிற்கான 94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விருதுக்கான இறுதி பட்டியல் நேற்று வெளியான நிலையில் சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' படம் இதில் இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படம் இறுதி பட்டியலில் இடம் பெறவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் ஆஸ்கர் விருதுக்கான சிறந்த ஆவணப்படங்களுக்கான இறுதி பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 'ரைட்டிங் வித் ஃபயர்' என்ற ஆவணப்படம் தேர்வாகியுள்ளது.  இந்தியாவில் இருந்து முதல் முறையாக ஒரு ஆவணப்படம் ஆஸ்கர் இறுதி பட்டியலில் இடம் பிடித்திருப்பது இதுவே முதல்முறையாகும். 

 

ரின்டு  தாமஸ் மற்றும் சுஷ்மிதா கோஷ் இருவரும் இணைந்து 'ரைட்டிங் வித் ஃபயர்' என்ற ஆவணப் படத்தை இயக்கியிருந்தனர். பட்டியலின பெண் பத்திரிகையாளரை பற்றி ஆவணப்படமாக வெளியான இப்படம் உலக முழுவதிலும் இருந்து ஆஸ்கர் போட்டியில் கலந்து கொண்ட 139 ஆவணப் படங்களிலிருந்து இறுதி 5 படங்களில் ஒரு படமாக  தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் இறுதி பட்டியலில் 'ஜெய் பீம்' படம் இடம் பெறாமல் போனது, ரசிகர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில் 'ரைட்டிங் வித் ஃபயர்' ஆவணப்படம் ரசிகர்களுக்கு இன்னொரு நம்பிக்கையை தந்திருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடலூர் மாவட்டத்தில் மீண்டும் ஒரு 'ஜெய்பீம்'

Published on 24/01/2024 | Edited on 25/01/2024
Another jai bhim in Cuddalore District

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடந்த 2015 ஆம் ஆண்டு மும்தாஜ் என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த நெய்வேலி காவல்துறையினர் மேல்பட்டாம்பாக்கம் அருகே பி.என் பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற கூலி தொழிலாளியை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

அவரிடம் ஒரு வார காலம் விசாரணை செய்தனர். பின்னர் நெய்வேலி காவல்துறையினர் அவரின் கை மற்றும் கால்களின் நகங்களை பிடுங்கிய நிலையில் மிகவும் கவலைக்கிடமான முறையில் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியன் சிகிச்சை அளித்த மருத்துவரிடம் காவல்துறையினர் செய்ததை வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனையிலே சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் உயிரிழந்தார். இதை இயற்கை மரணமாக மாற்றுவதற்கு முயன்றதையெடுத்து இதுகுறித்து அவரது மனைவி ரேவதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட காவல்துறை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்  பல்வேறு கட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றது.

இதனையொட்டி இந்த வழக்கு நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் 174 சந்தேக வழக்காக பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்கு சி பி சி ஐ டி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இவர்களின் விசாரணையில் அப்போது நெய்வேலி காவல் ஆய்வாளராக இருந்த ராஜா தற்போது (வடலூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக உள்ளார் ) இவருடன் உதவி ஆய்வாளராக இருந்த செந்தில்வேல் மற்றும் காவலர் சௌமியன் உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தி சிபிசிஐடி காவல்துறையினர் கொலை அல்லாத மரணம் என்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இதை அறிந்து கடலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட கட்சியினர் மாவட்டம் முழுவதும் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை மற்றும் எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை தடுப்பு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி கடந்த 2022 ஆம் ஆண்டு ஆய்வாளர் ராஜா உள்ளிட்ட மூன்று காவல்துறையினர் மீது கொலை வழக்கு மற்றும் எஸ்.சி எஸ்.டி பிரிவுகளை சேர்த்துக்கொள்ளலாம் என உத்தரவிட்டது.

அப்போது அதிமுக ஆட்சி காலத்தில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருந்த ஆய்வாளர் ராஜா, திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் மீண்டும் வடலூர் காவல் நிலையத்திற்கு ஆய்வாளராக அமர்த்தப்பட்டார். இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொலை குற்றவாளியான ராஜாவை மாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்போது போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட ஆய்வாளர் ராஜா தனது செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் கட்சி தலைவர்கள் மூலமும் பிற முக்கிய நபர்கள் மூலமும்  சுப்பிரமணியன் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு நெருக்கடிகளும் பிரச்சனைகளும் கொடுத்து வந்தனர்.

கொலை வழக்கு மற்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் குற்றவாளிகளான ஆய்வாளர் ராஜா உள்ளிட்ட 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டியும் விடுவிக்க கோரியும் மனு தாக்கல் செய்தனர்.

இதனால் சுமார் ஒரு வருடமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் ரேவதியின் சார்பாக உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் திருமூர்த்தி மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 11.1.2024 அன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 2 மாதத்திற்குள் இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன் அடிப்படையில் ஜனவரி 24-ஆம் தேதி கடலூர் சிறப்பு எஸ்.சி, எஸ்.டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஜீவக்குமார் மற்றும் வழக்கறிஞர்கள் ஜோதிலிங்கம், லெனின், மேரி, சுரேஷ், ஆழ்வார், பரமேஸ்வரன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன் மற்றும் செயற்குழு உறுப்பினர் ராஜேஷ், வாதியான ரேவதி மற்றும் குற்றவாளியான ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வாளர் செந்தில்வேல், சௌமியன் உள்ளிட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

3 மாதத்தில் தண்டனை கிடைக்கும் என தெரிந்தும் ராஜா அதுவரை எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறார். இதை கேட்டால் சக காவலர்களை மிரட்டும் தொனியில் பேசுவதாகவும் இவர் செய்யும் செயலால் கூட இருக்கும் காவலர்களுக்கும் பிரச்சனை ஏற்படலாம் என்ற பயம் உள்ளது என  காவல்துறையினரே கூறுகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கம்மாபுரம் காவல் நிலையத்தில் செங்கேணி என்பவரின் கணவர் ராசாகண்ணுவை கம்மாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் திருட்டு வழக்கில் அழைத்துச் சென்று அவரை கொலை செய்த சம்பவத்திற்கு நீதிகேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சம்பந்தப்பட்ட ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினருக்கு தண்டனை கிடைத்தது.  இதை ஜெய்பீம் படம் மூலம் அனைத்து மக்களுக்கும் எளிய முறையில் காட்சிப்படுத்தப்பட்டது. அதே பாணியில் மீண்டும் ஒரு கொலை பக்கத்துக் காவல் நிலையமான நெய்வேலி காவல் நிலையத்தில் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

டாப் இந்தியத் திரைப்படப் பட்டியல் - சூர்யா நிறுவனம் மகிழ்ச்சி

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
suriya produced 2 movies in imdb new top 250 indian list

ஐ.எம்.டி.பி என்ற இணையதளம் உலகத் திரைப்படங்கள், வெப் தொடர்கள் உள்ளிட்ட பலவற்றைப் பற்றிய தகவல்களை வழங்கும் ஒரு பிரபலமான இணையதளம். மேலும், ஆன்லைன் மூலம் மக்கள் அளிக்கும் புள்ளிகளை வைத்து சிறந்த படம் குறித்த பட்டியலை மக்களுக்குத் தொகுத்து வழங்குகிறது. இந்த இணையதளத்தில் டாப் இடத்தில் இடம்பெறுவது ஒரு அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. இதில் பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளையும் ரேட்டிங்கையும் பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த இணையதளம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியில், மக்களின் பெரும் கவனங்களைப் பெற்ற படங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இம்மாதம் வரை டாப் 250 இந்தியத் திரைப்படங்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 12 மற்றும் 13 இடங்களில் சூர்யா நடித்த ஜெய்பீம் மற்றும் சூரரைப் போற்று உள்ளிட்ட படங்கள் இடம்பிடித்துள்ளன. இதனை இந்த இரு படங்களைத் தயாரித்த 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அவர்களது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளனர். 

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘ஜெய்பீம்’. இப்படத்தில் சந்துரு என்கிற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்திருந்தார் சூர்யா. மேலும் மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ், பிரகாஷ்ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் சிறப்பாகத் தங்களது கதாபாத்திரங்களில் நேர்த்தியான நடிப்பினைக் கொடுத்திருந்தார்கள். இசைப் பணிகளை ஷான் ரோல்டன் மேற்கொண்டிருந்தார். 

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா முரளி நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான படம் 'சூரரைப் போற்று'. ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் 68வது தேசிய விருது விழாவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் ஐந்து விருதுகளை வென்றது.