
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் காதுவாக்குல படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் முஹம்மது மொபி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஸ்ரீசாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஸ்ரீசாந்த்-க்கு கிரிக்கெட் விளையாட விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த ஆண்டு முடிவடைந்ததையடுத்து, தற்போது மாநில கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார். இதனிடையே அவர் டிவி நிகழ்ச்சி மற்றும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுயிருந்தது குறிப்பிடத்தக்கது.