எம்.ஜி.ஆர். நடித்த 'சிரித்து வாழ வேண்டும்' என்ற திரைப்படத்தின் டிஜிட்டல் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (26/11/2022) நடைபெற்றது.
விழாவில் பேசிய நடிகர் சரத்குமார், "எம்.ஜி.ஆரின் உயிருக்கு உயிரான; ரத்தத்தின் ரத்தமான; எம்.ஜி.ஆரின் ரசிகர் பெருமக்களாகிய உங்களுக்கு, என்னுடைய உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு ரசிகனா இருந்து, இன்று வரை அவர் தான் தெய்வம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு, உங்களின் காலைத் தொட்டு வணங்குகின்ற அளவிற்கு எனது பாசத்தை நான் பகிர்கிறேன்.
1962-ல் சுமைதாங்கியில் யாருக்கோ எழுதின பாட்டு, புரட்சித்தலைவருக்கு சரியா இருக்கும்னு போட்டுக் காமிச்சாங்க. நான் அண்மையில் அந்தப் பாட்ட பாடி காமிச்சேன். எங்க பாடி காமிச்சேனா, புனித்ராஜ்குமார் மறைந்த பிறகு. 'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்' என்ற பாடலைப் பாடி காமிச்சேன். ‘வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம். வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்'. அது உண்மையிலே புரட்சித்தலைவருக்குனு எழுதப்பட்ட பாடல் போன்றுதான் தோன்றுகிறது.
நான் உங்கள்ல ஒருத்தன். ரசிகன் நான். இன்னும் புரட்சித்தலைவர் பத்தி தப்பா பேசினால், அடிதான் வாங்குவாங்கனு பலமுறை சொல்லிட்டேன். அந்த அளவிற்கு பாசத்தை வைத்திருப்பவன். உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து அவரை விரும்புகிறவன் நான். அவரது பாடல் வரிகள் தான் என்னுடைய வாழ்க்கை என்றே சொல்லலாம். 'உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் தலைவணங்காமல் நீ வாழலாம்'. இந்த பாடல்ல செல்ப் கான்பிடன்ஸ் பத்தி பேசியிருக்காரு.
காலையில, அந்த பாடல்ல நீங்க கேட்டுட்டீங்கனா போதும்... எந்தப் பாடலாக இருந்தாலும் சரி. அச்சம் என்பது மடைமையடா, அஞ்சாமை திராவிட உடைமையடா உள்ளிட்ட எந்தப் பாடல போட்டாலும் காலையில் ஒரு எனர்ஜி வந்துடும். இந்தப் படத்தைப் பார்க்கும் போது எனக்கு வயசு 20. இன்னைக்கு 25. அந்தப் படத்துல, புரட்சித்தலைவர் அந்தக் காட்சியில் நடிக்கும் போது அவருக்கு வயது 57. அந்தப் பாடலில் ஆடும் போது அவருக்கு என்ன துள்ளல். இன்னைக்கு இருக்கிற இளைஞர்கள் தோற்றுவிடுவார்கள்.
57 வயசுல இப்படி குதிச்சி ஆடிட்டு இருக்காருன்னா, சாதாரண விஷயம் கிடையாது. ஒழுக்கம், உடல் ஆரோக்கியம். ஆரோக்கியம் இருந்தால் தானே எதையுமே சாதிக்க முடியும். இன்னைக்கு அந்த ஆரோக்கியம் சீர்குலைந்து போகின்ற சூழலிலே போய்க் கொண்டிருக்கிறது. வருங்கால சமுதாயம், வருங்கால இளைய தலைமுறை சிறப்பாக இருக்க வேண்டும் என்று சொன்னால் உடல் ஆரோக்கியம் அவசியம். அது புரட்சித்தலைவரைப் பார்த்துத்தான் தெரிஞ்சிக்கணும். அமெரிக்காவில இருந்து திரும்பி வரும் போது, ஒரு பெட்டில வச்சி கொண்டு வருவாங்க, கூண்டுக்குள்ள தான் இருப்பாரு, அப்படினாங்க.
அவரு வந்த வேகம், உணர்ச்சி பார்த்தா ஆஹா, தலைவரு இப்படி வந்து இறங்குறாரே அப்படினு ஆச்சரியப்பட்டாங்க. புரட்சித் தலைவர் ஒரு விழாவுக்கு போகிறார். அதை ரசிகனாக இருந்து பாக்கறேன். அப்படியே கூட்டத்துல வந்தாரு மேடைல இரண்டு தாவு தாவி மேல போயிட்டாரு. அத பாக்கும் போது எப்படி இருக்குன்னா, வயசே ஆகாது போலயே தலைவனுக்கு, அப்படிங்கற மாதிரி தான் பாக்க வேண்டியிருக்கு.
அவர் என்ன சொல்றாருனு கேட்டு வாழ்ந்தாலே, உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைந்துவிடும். என் படம்லாம் கூட இப்படி ரிலீஸ் பண்ணிடலாம். ஏன்னா, நாட்டாமை, சூரியவம்சம்லாம் 30 ஆண்டுகள், இதே தியேட்டரில் 175-வது நாள் விழா நடந்திருக்கு. அப்ப எல்லாத்தையும் ரிலீஸ் பண்ணலாம்." இவ்வாறு சரத்குமார் கூறினார்.