If anyone obstructs the release of the film, file a civil case says SC

மணிரத்னம் - கமல் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படம் கடந்த 5ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்கியது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது.

முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கமல் பேசிய கருத்து கர்நாடாகாவில் சர்ச்சையானது. அவர் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று பேசிய நிலையில் அது கர்நாடகாவில் கொதி நிலையை ஏற்படுத்தியது. அம்மாநில முதலமைச்சர் முதல் எதிர் கட்சி தொடங்கி பல்வேறு கன்னட அமைப்புகள், கன்னட மொழியை கமல் இழிவுபடுத்திவிட்டதாக போர்க்கொடிகள் தூக்கின. மேலும் கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியாகாது என்றும் எச்சரிக்கைகள் விடுத்தன. ஆனால் கமல் 'அன்பும் மன்னிப்பு கேட்காது' என அவரது பாணியில் திட்டவட்டமாக மன்னிப்பு கேட்க முடியாது என சொல்லிவிட்டார். இருந்தாலும் அங்கு எதிர்ப்புக் குரல்கள் ஓய்ந்தபாடில்லை. கமலுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு உருவபொம்மையும் எரிக்கப்பட்டது.

Advertisment

கன்னட அமைப்புகள் கூறிய எச்சரிக்கையை கர்நாடக திரைப்பட வர்த்தக சபை வலியுறுத்தி படத்திற்கு தடை விதித்தது. இதனால் தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை. இதனிடையே படத்தை எந்த தடையும் இல்லாமல் திரையிடவும் பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் கமல் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணை பல கட்டங்களாக நடந்தது. இன்னும் நிலுவையில் இருக்கிறது. இதனிடையே மகேஷ் ரெட்டி என்பவர் தக் லைஃப் படத்திற்கு கர்நாடகத்தில் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவின் மீதான விசாரணையும் பல கட்டஙளாக வந்தது. கடைசியாக நடந்த விசாரணையில் தக் லைஃப் படத்தை தடை செய்ய முடியாது என உத்தரவிட்டு திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க அரசு உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் கூறினர். இதனால் கர்நாடக அரசு படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பு வழங்கப்படும் என பிராமணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் இன்று நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம், “ ஒரு நகைச்சுவை நடிகர் ஏதாவது கூறினால் கூட உணர்வுகள் புண்படுகின்றன என்று நாசவேலைகள் நடக்கின்றனர். நாம் எங்கே எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்? தக் லைஃப் படம் வெளியிடுவதற்கு கர்நாடக அரசு முழு பாதுகாப்பை அளிக்க வேண்டும். வன்முறைகள் ஏற்பட்டால் அரசு அடக்க வேண்டும் கடுமையன நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக தக் லைஃப் படத்தைத் திரையிட யாரேனும் தடையாக இருந்தால், அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும்” என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும் தக் லைஃப் படத்தை வெளியிடும் திட்டம் இல்லை என படத்தின் கர்நாடக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய வி.ஆர். ஃபிலிம்ஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.