அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தமிழ் தொடரான 'சுழல் - தி வோர்டெக்ஸ்' எனும் வலைதளத் தொடரைத் தொடர்ந்து, புஷ்கர் - காயத்ரியின் சொந்தப் பட நிறுவனமான வால்வாட்சர் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'வதந்தி - ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய அசல் தமிழ் வலைதளத் தொடர் 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'. இதில் வெலோனி எனும் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார். இவருடன் எஸ்.ஜே.சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதளத் தொடருக்கு சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார். அமேசான் ப்ரைம் வீடியோவில் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் வெளியாகவிருக்கும் அசல் தொடரான 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் வலைதளத் தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் அமேசான் பிரைம் வீடியோ ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோஹித், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், எஸ்.ஜே.சூர்யா, நாசர், லைலா, விவேக் பிரசன்னா, ஸ்மிருதி வெங்கட், குமரன் தங்கராஜன், தயாரிப்பாளர்களும் இயக்குநர்களுமான புஷ்கர்-காயத்ரி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் பேசுகையில், ''வதந்தி... இந்தச் சமுதாயத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இருக்கிறது. பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால், மனிதன் தன்னுடைய பொழுதுபோக்கிற்குக் கண்டுபிடித்த முதல் விசயமே வதந்தி தான் என்று நான் நினைக்கிறேன். 'யாகவாராயினும் நா காக்க..' என்னும் திருக்குறளில், யார் எதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றாலும், வாயிலிருந்து வெளியாகும் வார்த்தைகளையாவது கட்டுப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். இது திருக்குறள். இந்தத் திருக்குறளை இதுவரை வலிமையாகவும், கூர்மையாகவும் ரசிக்கும் வகையில் யாரும் கதையாக சொல்லவில்லை. ஒருவேளை இதை நேர்த்தியாக சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். இதை எப்போது சொன்னாலும் நன்றாக இருக்கும் என நம்பினேன்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் அமேசான் பிரைம் வீடியோவின் அபர்ணா மேடத்தை மும்பையில் சந்தித்தேன். 20 நிமிடம் வதந்தி தொடரின் கதையை விவரித்தேன். அவர்கள் உடனடியாக கதையின் உள்ளடக்கத்தை துல்லியமாகப் புரிந்து கொண்டு உற்சாகத்துடன் பணிகளைத் தொடங்குமாறு கூறினார். அத்துடன் படைப்பாளிக்குரிய சுதந்திரத்தையும் வழங்கினார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதன் பிறகு 11 மாதங்கள் இந்த தொடருக்கான திரைக்கதையை எழுதினேன். தயாரிப்பாளர்களும், நண்பர்களுமான புஷ்கர்- காயத்ரி அவர்களும் இதன் திரைக்கதையை முழுவதுமாக வாசித்து, ஆங்காங்கே தங்களது மேலான ஆலோசனையை வழங்கினார்கள்.
என்னுடைய திரையுலக பயணத்தை எஸ்.ஜே.சூர்யாவிடமிருந்து தான் தொடங்கினேன். அவரையே இந்த தொடரில் இயக்கியிருப்பது என்னுடைய கனவு நனவானது போல் உணர்கிறேன். எஸ்.ஜே.சூர்யா இயக்குநர் மற்றும் நடிகர். ஆனால் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் அவர் நடிகராக மட்டுமே இருக்கிறார். இதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்தத் தொடரில் நடித்திருக்கும் லைலா, சஞ்சனா, விவேக் பிரசன்னா, நாசர், குமரன் தங்கராஜன் ஆகிய நடிகர்களுக்கும், சரவணன், சைமன் கே கிங், கெவின் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
அமேசான் ப்ரைம் வீடியோவின் 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் வெளியாகி வெகுவாக பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு வருகிறது. இந்தத் தொடர் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் இரண்டாம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமல்லாமல், 30-க்கும் மேற்பட்ட சர்வதேச மொழிகளுடன் 240 பிராந்தியங்களிலும் வெளியாகிறது.