Skip to main content

மனோபாலாவிற்கு அமெரிக்காவில் கிடைத்த கெளரவம் ; குவியும் பாராட்டுக்கள்

Published on 25/04/2022 | Edited on 25/04/2022

 

The honor on Manopala in the United States

 

பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து 1982-ஆம் ஆண்டு வெளியான 'ஆகாய கங்கை' படத்தின் மூலம் இயக்குநரானவர் மனோபாலா. தொடர்ந்து பல படங்களை இயக்கிய இவர் இன்று தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக திகழும் ரஜினியை வைத்து 'ஊர்காவலன்' எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துள்ளார். 2014-ல் வெளியான 'சதுரங்க வேட்டை' படத்தை முதல் முறையாக தயாரித்திருந்தார். பிறகு நகைச்சுவை நடிகராகவும் மக்கள் மனதில் இடம் பிடித்து  நடித்து வருகிறார். 

 

இந்நிலையில், பிரபல இயக்குநர் மற்றும் நடிகராக திகழும் மனோபாலாவிற்கு 'டாக்டர்' பட்டம் கொடுத்து கௌரவித்துள்ளது சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம். மேலும், குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில், இத்தனை வருடங்களாக மனோபாலா திரைத்துறையில் பணியாற்றிய சேவையை பாராட்டி 'வாழ்நாள் சாதனையாளர் விருதும்' வழங்கியுள்ளது. அவரை தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான பூச்சி முருகனுக்கும் டாக்டர் பட்டம் வழங்கி சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம் கெளரவித்துள்ளது. இதனை பாராட்டி திரைத்துறையினர் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“விவேக், மனோபாலா, மயில்சாமி மூவருடனான நட்பு”  - அனுபவம் பகிரும் எம்.எஸ். பாஸ்கர்

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

M. S. Bhaskar Interview  -  Vivek - Manobala - Mayilsamy

 

தன்னுடைய திரையுலக மற்றும் வாழ்வியல் அனுபவங்கள் பலவற்றையும் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

நடிகர் விவேக் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் வேலை செய்துகொண்டிருந்தவர். என்னுடைய தம்பியும் அங்கு தான் வேலை செய்துகொண்டிருந்தார். கவிதாலயாவின் படங்களில் விவேக் நடித்தபோது நான் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக இருந்தேன். அப்போதே அவர் எனக்குப் பழக்கம். நான் வாய்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தபோது வாய்ஸ் எஃபெக்ட்டுகள் கொடுப்பவராக இருந்தவர் மயில்சாமி. மனோபாலாவும் எனக்கு நீண்ட கால பழக்கம். மயில்சாமி எனக்கு மிக நெருங்கிய நண்பன். மனோபாலாவை நான் அண்ணன் என்று தான் அழைப்பேன். 

 

என் மீது மனோபாலா மிகுந்த அன்போடு இருப்பார். மயில்சாமியை அடிக்கடி நான் சந்திப்பேன். சிவராத்திரி நிகழ்ச்சிக்கு வருகிறாயா என்று மயில்சாமி என்னை போனில் அழைத்தான். அன்று எனக்கு ஷூட்டிங் இருந்ததால் செல்ல முடியவில்லை. திடீரென்று அவன் இறந்துவிட்டான் என்கிற செய்தி வந்தது. என்னால் நம்ப முடியவில்லை. விவேக்கின் மரணமும் அப்படியானது தான். மனோபாலா அண்ணன் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனாலும் அவர் இறந்துபோவார் என்று நினைக்கவில்லை. என்னுடைய நெருங்கிய நண்பன் தினகரனும் சமீபத்தில் இறந்தான். 

 

என்னுடைய நண்பர்கள் பற்றியோ, நான் செய்யும் தானங்கள் பற்றியோ எதுவுமே தெரியாதவர்கள் என்னைப் பற்றி செய்யும் விமர்சனங்கள் அவர்களுடைய அறியாமையைத் தான் காட்டுகிறது. நான் பணம் கொடுக்கமாட்டேன் என்பது உண்மைதான். ஒருமுறை சுகர் மாத்திரை வாங்கப் பணம் வேண்டும் என்று உணவகத்தில் ஒருவர் கேட்டார். நான் நூறு ரூபாய் கொடுத்தேன். அதை எடுத்துக்கொண்டு நேராக அவர் டாஸ்மாக் சென்றார். அதிலிருந்து நான் பணமாக யாரிடமும் கொடுப்பதில்லை. மாத்திரை வேண்டுமென்றால் மருந்தகத்துக்கு அழைத்துச் சென்று நானே வாங்கித் தருவேன்.

 

சம்பாதிக்கும் அனைத்தையும் வாரிக் கொடுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஒரு இயக்குநரின் இரண்டு படங்களில் அருமையான காட்சிகள் செய்திருந்தேன். அந்த இரண்டு காட்சிகளையும் அவர் வெட்டிவிட்டார். அது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. தெரிந்த ஒருவரிடம் நம்பி 5 லட்ச ரூபாயை அவருடைய வியாபாரத்துக்காக கொடுத்தேன். இன்று வரை அவர் திருப்பித் தரவில்லை. தரக்கூடிய நிலையில் அவர் இல்லை. கேட்டுக் கேட்டுப் பார்த்து விட்டுவிட்டேன். இனி உஷாராக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். வாழ்க்கையில் எது கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்கிற மனநிலைக்கு நாம் வந்துவிட வேண்டும்.

 


 

Next Story

"சின்ன பிரச்சனை நடந்தாலும் இரவு ஃபோன் பண்ணிடுவார்" - கார்த்தி

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

 

karthi about manobala, kajendran, mayilsamy

 

நடிகர் சங்கத்தின் சார்பில் மறைந்த திரை பிரபலங்கள் கஜேந்திரன், மயில்சாமி, மனோபாலா உள்ளிட்டோருக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. சென்னை தி.நகரில் உள்ள சர் பி.டி. தியாகராயா மகாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கார்த்தி, பொன்வண்ணன், மன்சூர் அலிகான், நடிகை தேவையானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் ஃபெப்சி, இயக்குநர் சங்கம் மற்றும் சின்னத்திரை சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

 

இந்த நிகழ்வில் நடிகரும், நடிகர் சங்க பொருளாளருமான கார்த்தி பேசுகையில், "3 பேருமே பேசுறதுக்கு முன்பே மக்களை மகிழ்விப்பவர்கள். அவர்களை பார்த்தாலே நாம சிரிச்சிடுவோம். அந்தளவுக்கு பார்த்தவுடனே சந்தோஷப்படுத்திடுவாங்க. கஜேந்திரன் சார் எப்பவுமே சந்தோஷமாக இருப்பார். ரொம்ப சப்போர்ட்டா இருப்பார். அவரை பற்றி தெரிஞ்சிக்கணும்னு தேடும் போது தான் கிட்டத்தட்ட 15 படங்கள் இயங்கியிருக்கிறார். 100 படங்களுக்கு மேல் நடிச்சிருக்கார் என்பது தெரியவந்தது. ரொம்ப பாசிட்டிவா இருக்கிற நபர். பெரிய ஆளுமை உள்ள ஒருவர். அவர் மறைவார் என்று நினச்சு கூட பார்க்கவில்லை. அவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்தது கூட எங்களுக்கு தெரியாமல் இருந்தது. 

 

மயில்சாமி சார், சிறுத்தை படத்திலிருந்தே பழக்கம். தனக்கு மிஞ்சினது தான் தானம் என்று சொல்வார்கள். அவரை பொறுத்தவரை தானத்துக்கு மிஞ்சினது தான் தனக்கு... என்று இருந்த ஒரு நபர். கடன் வாங்கி தானம் செய்கிற ஒரு நபரை நான் கேள்விப் பட்டதில்லை. அப்படி ஒருத்தர் அவர். சென்னை வெள்ளப்பெருக்கின் சமயத்தில் அவரிடம் இருந்த செயின், மோதிரம் என அனைத்தையும் விற்று மக்களுக்கு உணவளித்துள்ளார். குடும்பத்தை விட சமூகத்துக்காகத் தான் அதிகமாக வாழ்ந்துள்ளார். மற்றவர்களுக்கு உதவி கேட்கத் தயங்கமாட்டார். பலமுறை வேறொரு நபருக்காக என்னிடம் உதவி கேட்டு வந்திருக்கிறார். எம்.ஜி.ஆரை தலைவனாக ஏற்றுக்கொண்டு செயல்படக் கூடியவர். எம்.ஜி.ஆரை பற்றி நிறைய விஷயங்களை என்னுடன் பகிர்ந்துள்ளார். அவர் மறைந்ததை ஏற்றுக்கொள்ள விடியவில்லை.  

 

மனோபாலா சார் இப்போது இருந்திருந்தால் 'ஏண்டா இப்படி உட்காந்திருக்கீங்க... சிரிச்சு சந்தோஷமா இருங்கடா...' அப்படினு ஒரே நொடியிலே சிரிக்க வச்சிருப்பாரு. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், உணவு செலவை அவர் தான் பார்த்து கொள்வார். எந்த ஒரு தருணத்திலும் ஒரு பொறுப்பு கொடுக்கணும்னு நினைக்க மாட்டார். அவரே அதை எடுத்துக்கிட்டு செய்வார். எதாவது ஒரு சின்ன பிரச்சனை நடந்தாலும் அன்று இரவு ஃபோன் பண்ணி ஆறுதல் சொல்வார். வயசு வித்தியாசம் பார்க்காம ஈகோ இல்லாத மனிதர். அவருடைய நட்பு வட்டாரம் ரொம்ப பெருசு. பாரதிராஜா, கமல் என தொடங்கி பலரிடமும் தனிப்பட்ட முறையில் அவர்களது வாழ்க்கையில் பயணம் செய்தவர். ஒரு அற்புதமான மனிதர். 

 

இவர்களின் 3 பேருடைய இழப்பு மிக பெரிய இழப்பு, வருத்தம். உண்மையா நாங்க ரொம்ப மிஸ் பண்றோம். அவர்களின் குடும்பத்துடன் நிச்சயமாக பயணிப்போம். அவர்களோடு நிற்போம்" என்றார்.