வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, எம்ஜிஆர் மகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் பொன்ராமின் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘DSP’. இந்தப் படத்தின் கதாநாயகனாக விஜய்சேதுபதியும், கதாநாயகியாக மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனுகீர்த்தியும் நடித்துள்ளனர். இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’ புகழ், இளவரசு, ஞானசம்பந்தன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் டிசம்பர் 2 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ள நிலையில் நேற்று (25/11/2022) இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன், 'DSP' திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசையை வெளியிட்டார். விழாவில் இயக்குநர் மிஷ்கின், நடிகர் வைபவ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இயக்குநர் மிஷ்கின், "DSP இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருக்கிறேன். விஜய் சேதுபதி எனக்கு ரொம்ப பிடித்த நடிகர். தம்பி பொன்ராம் எனக்கு நெருங்கிய நண்பர். படம் ரொம்ப நன்றாக இருக்கும். வாழ்த்த வேண்டும் என்பதற்காக இங்கு வந்திருக்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைய நான் நெஞ்சார வாழ்த்துகிறேன். நன்றி" எனத் பேசினார்.
அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வைபவ், "எல்லோருக்கும் வணக்கம். ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. விஜய்சேதுபதி நடித்த 'DSP' படம் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆகிறது. ரொம்ப ரொம்ப சந்தோசம். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. போலீஸ் வேடத்தில் நடித்த விஜய்சேதுபதியின் அனைத்து படங்களும் வெற்றி அடைந்துள்ளது" என்று குறிப்பிட்டார்.