எம்.ஜி.ஆர். நடித்த 'சிரித்து வாழ வேண்டும்' என்ற திரைப்படத்தின் டிஜிட்டல் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (26/11/2022) நடைபெற்றது.
விழாவில் பேசிய நடிகர் மயில்சாமி, "கோயில் இல்லாத இறைவன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். டிஜிட்டல் என்கிற வார்த்தை கொஞ்சம் காலமாக தான் இருக்கிறது. ஆனால், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உடைய முகத்தைப் பார்க்கும் போது, டிஜிட்டலே அங்கிருந்து தான் வந்தது போல் உள்ளது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ரசிகன் மற்றும் பக்தன் என்பதில் எனக்கு பெருமை. அதிக நாள் உயிரோடு இருக்க வேண்டும் என்று ஆசை இல்லை.
அதேபோல், இருக்கும் வரை உதவி செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. உதவி தேவை என்றால், சரத்குமார் சாருக்கும், சத்யராஜ் சாருக்கும், பி.வாசு சாருக்கும், மறைந்தாலும் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் விவேக் சாருக்கும் போன் செய்து கேட்பேன். அவர்களும் உடனே செய்வார்கள். தொண்டனுக்கும், வேலை செய்பவர்களுக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சிந்தித்துக் கொண்டிருந்த போதே, 'நான் ஏன் பிறந்தேன்' என்ற படம் புக் ஆனது. அதில் வந்தது 14 லட்சம் ரூபாய். ரசிகனுக்கும், தொண்டனுக்கும் பணம் கொடுப்பதற்காகவே ஒரு படத்தில் நடித்தவர், அந்த பணத்தை வாரி வழங்கியவர் எம்.ஜி.ஆர்.
இன்றைக்கு எத்தனை கோடி வாங்குகிறார்கள்? என்ன பண்ணுகிறார்கள்? இந்த கோடியில் இருந்து அந்த கோடி வரைக்கும் கோடி தான். மனிதனுக்கு தருமம் செய்யும் சிந்தனை இருக்க வேண்டும்" என்று அறிவுரை வழங்கினார்.