'காட்மேன்' என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட இணையத் தொடர், தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த இணையத் தொடரை பாபு யோகேஸ்வரன் இயக்க, இளங்கோ தயாரித்துள்ளார். வருகின்ற 12ஆம் தேதி ஜீ நிறுவனத்தின் ஓ.டி.டி. பிளாட்ஃபார்மில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
இந்தத் தொடரில் டேனியல் பாலாஜி உள்ளிட்ட சில பிரபலங்களும் நடித்திருக்கின்றனர். அண்மையில் இத்தொடரின் ட்ரைலர் வெளியானது. அதில் குறிப்பிட்ட சமூகத்தையும், மதத்தையும் இழிவுபடுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இந்தத் தொடரைத் தடை செய்ய வேண்டும், இயக்குனர், தயாரிப்பாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து அமைப்பினர் புகாரளித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்த சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி, போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். முதல்கட்டமாக ‘காட்மேன்’ தொடரின் இயக்குனர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோ மீது கலவரத்தை ஏற்படுத்துதல், பகையை ஊக்குவித்தல், வதந்தியைப் பரப்புதல் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் நேரில் ஆஜராகுமாறு 3ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது.
இதையடுத்து கடந்த 3ஆம் தேதி இருவரும் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், இருவரும் ஆஜராகவில்லை. இதையடுத்து நாளை (6ஆம் தேதி) காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 2-ஆவது முறையாக இருவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர்.