Skip to main content

மற்ற நடிகர்கள் Vs அருண் விஜய் - ஆச்சரியமான வித்தியாசம் கூறும் ‘சினம்’ இயக்குநர்

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

GNR Kumaravelan

 

ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில், அருண் விஜய், பாலக் லால்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ’சினம்’ படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் சினம் படம் குறித்து இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“நாம் செய்திகளில் பல விஷயங்களைப் பார்க்கிறோம். ஆனால், சில விஷயங்கள் மட்டும் நம் மனதில் அடுத்த சில நாட்களுக்கு ஓடிக்கொண்டே இருக்கும். அது மாதிரியான ஒரு விஷயத்தை மையமாக வைத்துதான் சினம் படத்தை உருவாக்கியிருக்கிறோம். இந்தப் படம் பேசும் விஷயம் நாம் பார்த்துப் பழகியது என்பதால் படம் பார்ப்பவர்கள் கதையோடு எளிதாக ஒன்றிப்போக முடியும். 

 

இந்தக் கதை அருண் விஜய்க்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்ததும் அவருடைய முந்தைய போலீஸ் படங்களைப் பார்த்தேன். அதிலிருந்து வித்தியாசமாக என்ன பண்ணலாம் என்று பார்த்து இந்தக் கதையை எழுதினேன். இந்தப் படத்தில் எஸ்.ஐ.யாக அருண் விஜய் நடித்திருக்கிறார். நாம் வெளியே இருந்து பார்க்கும் போலீஸுக்கும் அவர்களுடைய வாழ்க்கையை அருகில் இருந்து பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. போலீஸாரின் வாழ்க்கையில் உள்ள சில பிரச்சனைகளையும் இந்தப் படத்தில் பேசியிருக்கிறோம். 

 

அருண் விஜய்க்கு கதை பிடித்திருந்ததால் உடனே சம்மதம் சொன்னார். இந்தப் படத்தை அப்பாவே தயாரிக்கட்டும், உங்களுக்கு சம்மதமா என்றார். விஜய்குமார் சார் இந்தப் படத்திற்குள் வந்ததும் எனக்கு பொறுப்பு அதிகமாகிவிட்டது. அவரே செட்டில் இறங்கி நிறைய வேலைகள் செய்வார். இயக்குநருக்கு என்ன தேவையோ அதை பண்ணிக்கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக வந்துள்ளது என்றால் அதற்கு விஜய்குமார் சார்தான் முக்கிய காரணம்.

 

கரோனா காரணமாக படத்தை இரண்டு ஆண்டுகள் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. நான் எப்போதெல்லாம் சோர்வடைகிறேனோ அப்போதெல்லாம் அருண் விஜய்யின் பாசிட்டிவிட்டிதான் என்னை உற்சாகமாக்கும். படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. மற்ற நடிகர்கள் சாங் சீக்குவன்ஸ் எடுக்கப்போகிறோம் என்றால் உற்சாகமாகிவிடுவர்கள். ஏனென்றால் அதுதான் ரொம்பவும் ஈஸியாக இருக்கும். ஆனால், அருண் விஜய் ஃபைட் சீக்குவன்ஸ் எடுக்கும்போதுதான் உற்சாகமாவார். 

 

சினம் வரும் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவருக்கும் பிடிக்கக்கூடிய படமாக இருக்கும் என்று நம்புகிறேன்”.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நிறைய மெசேஜ்கள் வருகிறது” - தெளிவுபடுத்திய அருண் விஜய்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
arun vijay about Mission Chapter 1 ott update

இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியான படம் ‘மிஷன் சாப்டர் 1’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் குறித்து ரசிகர்கள் தன்னிடம் கேட்டு வருவதாக அருண் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்ட அவர், “மிஷன் சாப்டர் 1 பட ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து நிறைய மெசேஜ்கள் வருகிறது. லைகா நிறுவனத்திடம் கூறியிருக்கிறேன்.” என குறிப்பிட்ட அவர், ஒரு தனியார் தொலைக்காட்சி அதன் உரிமையை வாங்கியுள்ளதாகவும் அதனால் அவர்களிடமே ரசிகர்கள் கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

அருண் விஜய் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

“மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது” - அருண் விஜய் புகார்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
arun vijay complaint against you tube channel

அருண் விஜய் கடைசியாக ஏ.எல். விஜய் இயக்கத்தில் மிஷன் சாப்டர் 1 படத்தில் நடித்திருந்தார். கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் அருண் விஜய், பிரபல மூத்த நடிகர் விஜயகுமாரின் மகன் என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில், தற்போது தனது குடும்பம் குறித்து தனியார் யூட்யூப் ஒன்றில் தவறாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அருண் விஜய் சார்பில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. 

அந்த புகார் மனுவில், தன்னைப் பற்றியும் தனது தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி பற்றியும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனியார் யூட்யூப் சேனல் ஒன்று வீடியோக்களை பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்த அருண் விஜய், அதனால் தனது குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தவறான தகவல்களைப் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.