Skip to main content

மற்ற நடிகர்கள் Vs அருண் விஜய் - ஆச்சரியமான வித்தியாசம் கூறும் ‘சினம்’ இயக்குநர்

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

GNR Kumaravelan

 

ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில், அருண் விஜய், பாலக் லால்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ’சினம்’ படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் சினம் படம் குறித்து இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“நாம் செய்திகளில் பல விஷயங்களைப் பார்க்கிறோம். ஆனால், சில விஷயங்கள் மட்டும் நம் மனதில் அடுத்த சில நாட்களுக்கு ஓடிக்கொண்டே இருக்கும். அது மாதிரியான ஒரு விஷயத்தை மையமாக வைத்துதான் சினம் படத்தை உருவாக்கியிருக்கிறோம். இந்தப் படம் பேசும் விஷயம் நாம் பார்த்துப் பழகியது என்பதால் படம் பார்ப்பவர்கள் கதையோடு எளிதாக ஒன்றிப்போக முடியும். 

 

இந்தக் கதை அருண் விஜய்க்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்ததும் அவருடைய முந்தைய போலீஸ் படங்களைப் பார்த்தேன். அதிலிருந்து வித்தியாசமாக என்ன பண்ணலாம் என்று பார்த்து இந்தக் கதையை எழுதினேன். இந்தப் படத்தில் எஸ்.ஐ.யாக அருண் விஜய் நடித்திருக்கிறார். நாம் வெளியே இருந்து பார்க்கும் போலீஸுக்கும் அவர்களுடைய வாழ்க்கையை அருகில் இருந்து பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. போலீஸாரின் வாழ்க்கையில் உள்ள சில பிரச்சனைகளையும் இந்தப் படத்தில் பேசியிருக்கிறோம். 

 

அருண் விஜய்க்கு கதை பிடித்திருந்ததால் உடனே சம்மதம் சொன்னார். இந்தப் படத்தை அப்பாவே தயாரிக்கட்டும், உங்களுக்கு சம்மதமா என்றார். விஜய்குமார் சார் இந்தப் படத்திற்குள் வந்ததும் எனக்கு பொறுப்பு அதிகமாகிவிட்டது. அவரே செட்டில் இறங்கி நிறைய வேலைகள் செய்வார். இயக்குநருக்கு என்ன தேவையோ அதை பண்ணிக்கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக வந்துள்ளது என்றால் அதற்கு விஜய்குமார் சார்தான் முக்கிய காரணம்.

 

கரோனா காரணமாக படத்தை இரண்டு ஆண்டுகள் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. நான் எப்போதெல்லாம் சோர்வடைகிறேனோ அப்போதெல்லாம் அருண் விஜய்யின் பாசிட்டிவிட்டிதான் என்னை உற்சாகமாக்கும். படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. மற்ற நடிகர்கள் சாங் சீக்குவன்ஸ் எடுக்கப்போகிறோம் என்றால் உற்சாகமாகிவிடுவர்கள். ஏனென்றால் அதுதான் ரொம்பவும் ஈஸியாக இருக்கும். ஆனால், அருண் விஜய் ஃபைட் சீக்குவன்ஸ் எடுக்கும்போதுதான் உற்சாகமாவார். 

 

சினம் வரும் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவருக்கும் பிடிக்கக்கூடிய படமாக இருக்கும் என்று நம்புகிறேன்”.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிவகார்த்திகேயன் பட இயக்குநருடன் அருண் விஜய் கூட்டணி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
arun vijay next movie update

அருண் விஜய் கடைசியாக ஏ.எல் விஜய் இயக்கத்தில் ‘மிஷன் சாப்டர் 1’ படத்தில் நடித்திருந்தார். கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அடுத்து பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது. 

இந்த நிலையில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. அருண் விஜய்யின் 36ஆவது படமாக உருவாகும் இப்படத்தை கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார். இவர் சிவகார்த்திகேயனின் மான் கராத்தே, உதயநிதியின் கெத்து உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன், சித்தி இட்னானி மற்றும் பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்க பாபி பாலசந்தர் வழங்குகிறார். 

இப்பட பூஜையில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் கிளாப் போர்டு அடித்து படப் பணிகளை தொடங்கி வைத்து படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தார். இப்படப் பூஜையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

Next Story

ஜெயம் ரவிக்கு பதில் அருண் விஜய்; தொடர்ந்து நடக்கும் மாற்றம்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
maniratnam kamal in thug life arun vijay replaced jayam ravi character

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ. வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்த சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. மேலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதால் தேர்தல் முடிந்த பின்பு தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னையில் இருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. பின்பு அவருக்கு பதில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஜெயம் ரவியும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு அவருக்கு பதில் நிவின் பாலியிடம் பேச்சு வார்த்தை நடந்ததாக முணுமுணுக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயம் ரவிக்கு பதிலாக அருண் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே மணிரத்னத்துடன் செக்கச்சிவந்த வானம் படத்தில் அருண் விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் பாலா இயக்கும் வணங்கான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.