மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2018-ஆம் ஆண்டு வெளியான படம் 'பரியேறும் பெருமாள்'. சினிமா ரசிகர்கள், விமர்சகர்களைத் தாண்டி அனைத்து தரப்பு மக்களிடத்திலும் நல்ல வரவேற்பு பெற்றது. இதுவரை வெளிவந்த சாதிய பிரிவினைகள், கொடுமைகளுக்கு எதிரான படங்களிலிருந்து பல வகைகளில் வேறுபட்டிருக்கும் படமாக இந்த திரைப்படம் அமைந்திருந்தது. இப்படத்தை நீலம் ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக பா.ரஞ்சித் தயாரித்திருந்தார். கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோர் நடித்து இருந்தனர். இப்படத்தில் கதாநாயகனின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து பலரின் கவனத்தை பெற்றவர் நாட்டுப்புற கலைஞர் தங்கராசு.
இந்நிலையில் தங்கராசின் வறுமை நிலை காரணமாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகம் இணைந்து புதிய வீடு ஒன்றைக் கட்டிக் கொடுத்துள்ளது. இந்த வீட்டை இயக்குநர் மாரி செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தனர். அதன் பிறகு பேசிய மாரி செல்வராஜ் "விளிம்பு நிலையில் உள்ள கலைஞரைத் தூக்கி விடுவதற்காக இந்த உதவியைச் செய்திருக்கிறார்கள். சினிமா மூலம் இது சாத்தியமானது மகிழ்ச்சி" என அவர் தெரிவித்துள்ளார்.