Skip to main content

சூர்யா கருத்துக்கு ரீட்வீட் செய்த காயத்ரி ரகுராம்... குவியும் கண்டனங்கள்!

Published on 14/09/2020 | Edited on 14/09/2020

 

gayathri raghuram

 

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுகள் நேற்று இந்தியா முழுவதும் நடந்து முடிந்தது. இதற்கிடையே இந்த தேர்வுக்காக தயாராகி வந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா, மாணவர் ஆதித்யா மற்றும் மோதிலால் ஆகியோர் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். இது தமிழகம் முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

 

''நீட்‌ தேர்வு பயத்‌தில்‌ ஒரே நாளில்‌ மூன்று மாணவர்கள்‌ தற்கொலை செய்து கொண்டது மனசாட்‌சியை உலுக்குகிறது. தேர்வெழுதப்‌ போகும்‌ மாணவர்களுக்கு 'வாழ்த்து' சொல்வதற்குப் பதிலாக 'ஆறுதல்‌' சொல்வதைப் போல அவலம்‌ எதுவுமில்லை. 'கரோனா தொற்று' போன்ற உயிர்‌ அச்சம்‌ மிகுந்த பேரிடர்‌ காலத்தில்கூட, மாணவர்கள்‌ தேர்வெழுதி தங்கள்‌ தகுதியை நிரூபிக்க நிர்ப்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது. அனைவருக்கும்‌ சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம்‌, ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச்‌ சட்டமாகக் கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின்‌ நிதர்சனம்‌ அறியாதவர்கள்‌ கல்விக்‌ கொள்கைகளை வகுக்கிறார்கள்‌. கரோனா அச்சத்தால்‌ உயிருக்குப் பயந்து 'வீடியோ கான்ஃபரன்ஸிங்‌' மூலம்‌ நீதி வழங்கும்‌ நீதிமன்றம்‌, மாணவர்களை அச்சமில்லாமல்‌ போய்‌த் தேர்வு எழுத வேண்டும்‌ என்று உத்தரவிடுகிறது. 'தேர்வு பயத்தில்‌ மாணவர்‌ தற்கொலை' என்ற செய்தி, அதிகபட்சம்‌ ஊடகங்களில்‌ அன்றைக்கான விவாதப் பொருளாக மாறுகிறது. இறந்து போன மாணவர்களின்‌ மரண வாக்குமூலத்தில்கூட எழுத்துப்‌ பிழைகளைக் கண்டுபிடிக்கும்‌ சாணக்கியர்கள்‌, 'அனல்‌ பறக்க' விவாதிப்பார்கள்‌.

 

நீட்‌ போன்ற 'மனுநீதி' தேர்வுகள்‌ எங்கள்‌ மாணவர்களின்‌ வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும்‌ பறிக்கிறது. அநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள்‌ பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும்‌ வயிற்றிலும்‌ அடித்துக் கொள்கிற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள்‌ தண்டனையாக மாறுகிறது. மாணவர்களின்‌ நலன்‌ மீது கொஞ்சம்கூட அக்கறை இல்லாத நம்‌ கல்வி முறையில்‌, இனி பெற்றோர்களும்‌, ஆசிரியர்களுமே விழிப்புடன்‌ இருக்க வேண்டும்‌. நமது பிள்ளைகளின்‌ தகுதியையும்‌ திறனையும்‌ வெறும்‌ தேர்வுகள்‌ தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது. இந்த நியாயமற்ற தேர்வுகளுக்கு அவர்களைத்‌ தயார்படுத்த துணைநிற்பது போலவே, மாணவர்கள்‌ வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளவும்‌ தயார்படுத்த வேண்டும்‌. அன்பு நிறைந்த குடும்பம்‌, உறவு, நண்பர்கள்‌ சூழ்ந்த அற்புதமான இந்த வாழ்விற்கு முன்பு, தேர்வுகளின்‌ முடிவுகள்‌ அற்பமானது என்பதை உணர்த்துவது முக்‌கியம்‌.

 

மகாபாரத காலத்து துரோணர்கள்‌ ஏகலைவன்களிடம்‌ கட்டை விரலை மட்டுமே காணிக்கையாகக் கேட்டார்கள்‌. நவீனகால துரோணர்கள்‌ முன்னெச்சரிக்கையுடன்‌ ஆறாம்‌ வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும்‌ என்று கேட்‌கிறார்கள்‌. இதையெல்லாம்‌ கடந்து படித்து முன்னேறுகிறவர்களை 'பலியிட' நீட்‌ போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்‌திருக்கிறார்கள்‌.

 

ஒரே நாளில்‌ 'நீட்‌ தேர்வு' மூன்று மாணவர்களைக்‌ கொன்று இருக்கிறது. இன்று நடந்ததே நேற்றும்‌ நடந்தது. இனி நாளையும்‌ நடக்கும்‌. நாம்‌ விழிப்புடன்‌ இல்லாமல்‌ போனால்‌ மீண்டும்‌ மீண்டும்‌ நடந்து கொண்டே இருக்கும்‌. அப்பாவி மாணவர்களின்‌ மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக்கூடாது. சாதாரண குடும்பத்துப் பிள்ளைகளின்‌ மருத்துவர்‌ கனவில்‌ தீவைக்கற 'நீட்‌ தேர்வுக்கு' எதிராக ஒரு சமூகமாக நாம்‌ ஒன்றிணைந்து குரல்‌ எழுப்புவோம்‌" எனக் கூறியுள்ளார்.

 

Ad


இந்நிலையில் இந்தப் பதிவு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள நடிகை காயத்ரி ரகுராம், “முதல்நாள் முதல் ஷோ தியேட்டரில் கொண்டாடும் விதமாக வைக்கப்படும் பேனர் விழுந்து ரசிகர்கள் இறந்தால் சினிமாவையே தடைசெய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்போமா? இதில் எந்த ஒரு லாஜிக்கும் இல்லையே. தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள். ஒவ்வொருநாளும் மருத்துவர்கள் நோயாளிகளைப் பார்ப்பதும் கூட ஒருவகையில் தினமும் தேர்வு எழுதுவதைப் போலத்தான்” என்று ட்விட்டரில் ரி ட்வீட் செய்திருந்தார். 

 

இதற்குச் சமூக வலைத்தளத்தில், அப்படி என்ன சூர்யா தவறாகப் பேசிவிட்டார் என சூர்யாவுக்கு ஆதரவாகக் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காயத்ரி ரகுராமுக்கு அ.தி.மு.கவில் புதிய பொறுப்பு!

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Gayatri Raghuram new responsibility in ADMK

நடிகையும் நடனக் கலைஞருமான காயத்ரி ரகுராம், தமிழக பா.ஜ.கவில் வெளிநாடு மற்றும் பிற மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு தமிழக பா.ஜ.க மீது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.கவை சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வந்தார். அதனையடுத்து, அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்தித்து பேசியபோது, அவர் அக்கட்சியில் இணைவார் எனத் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், கடந்த ஜனவரி 19 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 

இந்த நிலையில், காயத்ரி ரகுராமுக்கு அ.தி.மு.க.வில் தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அ.தி.மு.கவின் மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் காயத்ரி ரகுராம் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அ.தி.மு.க.வினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“பொய்களை யார் கேட்பார்கள்? காலி ஓ ஜிம்கானா” - காயத்ரி ரகுராம்

Published on 03/07/2023 | Edited on 03/07/2023

 

 'Who listens to lies? Kali O Gymkhana'-Gayatri Raghuram

 

கன்னியாகுமரியில் பாஜகவின் 9 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “மீனவர்களுக்கு திமுக அரசு என்ன செய்திருக்கிறார்கள் எனச் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டுவோம் என்றார்கள். கட்டினார்களா?” என செங்கல் ஒன்றை தூக்கிக் காட்டி, “இதுதான் அந்த இரண்டு லட்சம் வீடு. திமுக ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் அவர்கள் கட்டிக் கொடுப்பதாக சொன்ன ஒரு வீடு கூட தமிழகத்தில் இல்லை. அதனால் தான் இந்த செங்கல்” என்றார்.

 

“2026 மார்ச் மாதம் மக்களுடைய பயன்பாட்டிற்கு எய்ம்ஸ் திறக்கப்படும். முதல்வருக்கு பாஜக ஒரு கேள்வி கேட்க கடமைப்பட்டிருக்கிறது. உங்கள் தேர்தல் வாக்குறுதியில் அதே மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என ஒரு வாக்குறுதி கொடுத்தீர்கள். ஒருவேளை நீங்கள் மறந்திருந்தீர்களா. உங்கள் வாக்குறுதி எண் 54. அந்த வேளாண் பல்கலைக்கழகம் எங்கு இருக்கிறது என்றால்” என 'அக்ரி யுனிவர்சிட்டி' என எழுதிய செங்கலை மீண்டும் அண்ணாமலை எடுத்துக் காட்டினார்.

 

 'Who listens to lies? Kali O Gymkhana'-Gayatri Raghuram

 

தொடர்ந்து சமூக வலைதளங்களில் கன்னியாகுமரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அளவுக்கு அதிகமாக மக்கள் கூட்டம் இருந்ததாக புகைப்படங்கள் வெளியாகியது. அதேநேரம் அக்கூட்டத்தில் பொதுமக்கள் அதிகமாக கலந்து கொள்ளவில்லை எனவும் அண்ணாமலை பேசிக் கொண்டிருந்தபோதே சிலர் அதிருப்தியில் சென்று விட்டார்கள் என காலி சேருடன் கூடிய புகைப்படம் ஒன்றும் சமூகவலைதளங்களில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அண்மையில் பாஜக கட்சியில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்  காலி சேர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, 'அவன் பொய்களை யார் கேட்பார்கள்? மலிவான அரசியலை யார் பார்க்க வேண்டும்? காலி ஓ ஜிம்கானா' எனப் பதிவிட்டுள்ளார்.