Skip to main content

விஜய் சேதுபதி படத்தில் வில்லனாக நடிக்கும் கௌதம் மேனன்

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

gautham menon play as an antagonist michael movie

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி மலையாளம், தெலுங்கு இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்துவருகிறார். சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதி படங்கள் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'விக்ரம்' படத்தில் கமலுடன் நடித்துவருகிறார்.  இதனிடையே இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்திலும்  நடித்துவருகிறார். 

 

இந்நிலையில், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் 'மைக்கேல்' படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய ஆக்சன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில், இயக்குநர் கெளதம் மேனன் வில்லனாக நடிக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து கரண் சி. புரொடக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கல்யாணம் பண்ணா நிம்மதியா வாழவே முடியாது” - விஜய் சேதுபதி வெளியிட்ட டீசர் வைரல்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Soodhu Kavvum 2 First Look and Teaser released

திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சூது கவ்வும்’. இதில் விஜய் சேதுபதி, அஷோக் செல்வன், பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. 

இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ‘சூது கவ்வும் 2: நாடும் நாட்டு மக்களும்’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட், தங்கம் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயரித்துள்ளனர். மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க எம்.எஸ். அர்ஜுன் இயக்கியுள்ளார். கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. 

Soodhu Kavvum 2 First Look and Teaser released

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை விஜய் சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ், அஷோக் செல்வன், உள்ளிட்ட சில பிரபலங்கள் அவர்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்கள். இப்படத்தில் மிர்ச்சி சிவா, கருணாகரனை தவிர்த்து ஹரிஷா, ராதா ரவி, எம்.எஸ். பாஸ்கர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார்.

டீசரில் முதல் பாகத்தை போலவே கடத்தல், காமெடி, ஆக்‌ஷன் போன்ற அம்சங்கள் இதிலும் தொடர்கிறது. குறிப்பாக மிர்ச்சி சிவா பேசும், “பொண்ணுங்களோட கற்பனையில தான் நிம்மதியா வாழ முடியும். கல்யாணம் பண்ணா நிம்மதியா வாழவே முடியாது” என்ற வசனம் தற்போது பலரது கவனத்தை பெற்றுள்ளது. படத்தின் இசை மற்றும் ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Next Story

ஆக்‌ஷன் கதைக்களம் வென்றதா? ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ விமர்சனம்!

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Joshua imai pol kaakha movie review

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் ரிலீசாகி இருக்கும் திரைப்படம் ஜோஷ்வா இமை போல் காக்க. பொதுவாக காதல் படங்களையும் அதில் ஆக்‌ஷன் காட்சிகளையும் சேர்த்து கொடுக்கும் கௌதம் மேனன் இந்த முறை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரைப்படம் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க முயற்சி செய்திருக்கிறார். அந்த முயற்சியில் அவருக்கு வரவேற்பு கிடைத்ததா, இல்லையா?இன்டர்நேஷனல் காண்ட்ராக்ட் கில்லர் ஆக இருக்கும் பிக் பாஸ் வருண் ஒரு நிகழ்வில் நாயகி ராஹியை சந்திக்கிறார். இருவருக்கும் காதல் மலர்கிறது. தான் ஒரு காண்ட்ராக்ட் கில்லர் என்ற உண்மையை ராஹியிடம் வருண் கூற, ராஹி காதலை முறித்துக் கொண்டு அமெரிக்கா சென்று விடுகிறார். இதற்கிடையே ஒரு மெக்சிகன் போதைப் பொருள் கடத்தல் தாதா போலீசில் சிக்கி விடுகிறார். அவருக்கு எதிராக வாதாட வக்கீல் ஆக களம் இறங்கும் ராஹியை கொல்ல மொத்த கடத்தல் கார கும்பலும் போட்டி போட்டுக் கொண்டு படையெடுக்கின்றனர். ராஹியை காப்பாற்ற கில்லர் வருண் நியமிக்கப்படுகிறார். அவர் தன் காதலியை கொலைகாரர்களிடமிருந்து காப்பாற்றினாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை. 

பொதுவாக காதல் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளை வைத்து ரசிக்க வைக்கும் கௌதம் மேனன் இந்த முறை முழுக்க முழுக்க ஒரு ஆக்‌ஷன் திரைப்படத்தை கொடுத்து இருக்கிறார். படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை 10 நிமிட இடைவெளியில் தொடர்ந்து சண்டை காட்சிகள் படம் முழுவதும் வருகிறது. விறுவிறுப்பாக செல்லும் இத்திரைப்படம் போகப்போக வேகம் எடுத்து இறுதியில் ஒரு திருப்பத்தோடு முடிந்து ரசிக்க வைத்திருக்கிறது. இருந்தும் ஒரு கதையாக பார்க்கும் பொழுது பெரிதாக எதுவுமே இல்லாமல் வெறும் ஆக்‌ஷன் காட்சிகளை மட்டுமே நம்பி இப்படத்தை கொடுத்திருக்கிறார் கௌதம் மேனன். அதற்கு முதல் பாதியில் நல்ல பலனும் இரண்டாம் பாதியில் சற்றே அயற்சியுடன் கூடிய பலனும் கிடைத்திருக்கிறது. முதல் பாதையில் இருந்த வேகமும் விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் சற்றே மிஸ்ஸிங். அதேபோல் வெறும் ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமே படம் முழுவதும் வருவது சில இடங்களில் சலிப்பு ஏற்படுத்துகிறது. இருந்தும் ஆக்‌ஷன் காட்சிகளை காட்சிப்படுத்திய விதமும் அதற்குள் வரும் காதல் காட்சிகளும் சிறப்பாக அமைந்து படத்தை கரை சேர்க்க உதவி இருக்கிறது.

நாயகன் வரும் தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து இப்படத்தில் நடித்திருக்கிறார். மற்ற அனைத்து காட்சிகளையும் தவிர ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக பங்களிப்பு கொடுத்திருக்கிறார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகள் மிகவும் ஸ்டைலிஷ் ஆக காட்சிப்படுத்தப்பட்டிருப்பது அவருக்கு மாஸாக இருக்கிறது. அதற்கேற்றார் போல் தன் உடல்வாகை மாற்றிக் கொண்டு சிறப்பான ஆக்‌ஷன் காட்சிகளை உருவாக்க உதவி புரிந்திருக்கிறார். இவரது கமிட்மென்ட் நன்றாகவே தெரிகிறது. நாயகி ராஹி வழக்கமான கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் சின்ன சின்ன உடல் மொழி, வசன உச்சரிப்பு, முகபாவனைகள் என நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார். இவருக்கும் வருணுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. சொல்லப்போனால் நாயகனைக் காட்டிலும் நாயகி சிறப்பாக நடித்திருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதியும்படியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். விஜய் டிவி புகழ் டிடி, ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் ஆர்டர் கொடுக்கும் பாட்டி கதாபாத்திரத்தை போல், இந்த படத்தில் நடித்திருக்கும் டிடி அந்த கதாபாத்திரத்திற்கான நியாயம் செய்திருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார் கிருஷ்ணா. ஒரே காட்சியில் வந்தாலும் மாஸ் காட்டியிருக்கிறார் மன்சூர் அலிகான். மற்றபடி உடன் நடித்த அனைத்து நடிகர்களுமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவில் ஆக்‌ஷன் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு யானிக் பென்னின் ஸ்டண்ட் கோரியோகிராபி நன்றாக உதவி இருக்கிறது. இவரது ஹாலிவுட் தரமான ஸ்டண்ட் காட்சிகள் படத்திற்கு மிகப் பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. பாடகர் கார்த்திக் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இவரது இசையில் நான் ஜோஸ்வா பாடல் கேட்கும் ரகம். அதேபோல் பின்னணி இசையிலும் தேர்ந்த இசையமைப்பாளர் போல் சிறப்பான இசையை கொடுத்திருக்கிறார். பொதுவாக கௌதம் மேனன் படங்கள் என்றாலே பாடல்களும் இசையும் சிறப்பாக இருக்கும். அதை இந்த படத்தில் கார்த்திக் கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்.

வழக்கமான கௌதம் மேனன் படங்கள் போல் வெறும் வாய்ஸ் ஓவரில் படம் இல்லாமல், முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளை மட்டுமே நம்பி இத்திரைப்படம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவை அனைத்துமே ரசிக்கும்படி இருப்பது படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. ஆங்காங்கே படத்தில் பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும், படம் சற்று வேகமாக நகர்வது ரசிகர்களுக்கு விறுவிறுப்பைக் கொடுத்துள்ளது.

ஜோஷ்வா - இமை போல் காக்க - அமர்க்களமான ஆக்‌ஷன்!