நடிகர் கௌதம் கார்த்திக், தான் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக 'பத்து தல' இருப்பதாக சொல்லி இருந்தார். உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியானதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். நடிகர் சிலம்பரசன், இயக்குநர் கிருஷ்ணா மற்றும் ஒட்டுமொத்த குழுவினருடன் இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
“ஒரு நடிகருக்கு அறிமுகப் படம் எப்படி முக்கியமோ, அதேபோன்று திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய ஒரு படமும் முக்கியமானது. 'பத்து தல' திரைப்படம் எனக்கு அப்படியான ஒரு உணர்வுப்பூர்வமான படம். முழு படமும் மிகவும் சவாலானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருந்தது. இது முழுமையான ஒரு டீம் வொர்க். அணியில் ஒருவர் இல்லாமல் கூட, இந்தப் படம் திட்டமிட்டபடி முழுமையாக முடித்திருக்க முடியாது. இரண்டு கொரோனா கால கட்டங்கள் உட்பட பல கடினமான விஷயங்களையும் நாங்கள் கடந்துதான் வந்திருக்கிறோம். இந்த சமயத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்கள் ஜெயந்திலால் கடா மற்றும் கே.இ.ஞானவேல்ராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
சிலம்பரசன் அண்ணன் இல்லாவிட்டால் 'பத்து தல' திரைப்படம் எங்களுக்கு நிறைவேறாத ஒன்றாகவே இருந்திருக்கும். எனக்காக அவர் சிரமப்பட்டு, கடினமான சவால்களைச் சந்தித்த விதம் என்னை வாயடைக்கச் செய்கிறது. அவர் உடல் அளவில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். ஒரு படத்திற்காக மீண்டும் எடையை அதிகரிக்க யாராவது தைரியமாக முடிவு செய்வார்களா என்று எனக்குத் தெரியவில்லை. இது கற்பனைக்கு அப்பாற்பட்டது; அவர் அதைச் செய்தார். அவரது அர்ப்பணிப்பும் ஆர்வமும் தான் இவ்வளவு அற்புதமான ரசிகர் பட்டாளத்தை அவருக்குத் தந்துள்ளது. அவரது நடிப்பு திரையில் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்.
ப்ரியா பவானி சங்கர் ஒரு அற்புதமான கோ- ஸ்டார். படப்பிடிப்புக்கு சரியாக வரும் நேரமும் ஆர்வமும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இயக்குநர் கிருஷ்ணா சார் தூணாக இருந்து முழு படத்தையும் தோளில் சுமந்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் சார் பல நடிகர்களின் காட் ஃபாதர். நான் எப்போதும் அவரை மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாகவே பார்க்கிறேன். அத்தகைய ஜாம்பவானுடன் பணியாற்றுவது எனக்கு ஆசீர்வாதம். மேலும் இந்த படத்தில் அவர் எனக்காக அழகான பாடல்களை கொடுத்துள்ளார்".