
நடிகை கௌதமி, பா.ஜ.க-வில் இருந்து கடந்த ஆண்டு அ.தி.மு.க-வில் இணைந்து அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் முன்னதாக ரூ. 25 கோடி மதிப்பிலான தனது சொத்துகளை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பா.ஜ.க பிரமுகர் அழகப்பன் என்பவர் அபகரித்ததாக சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக அந்தந்த மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்பு வழக்கு தொடர்பாக அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர்.
அந்த பல்வேறு வழக்குகளில் சென்னையில், நீலாங்கரையில் இருக்கும் ரூ.9 கோடி மதிப்பிலான கௌதமியின் வீட்டை அபரிகத்ததாக அழகப்பன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீலாங்கரை இடத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக கௌதமி புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி, நீலாங்கரையில் கட்டப்பட்ட கட்டுமானங்களுக்கு சீல் வைக்கப்பட்டுப் பூட்டியும் வைத்தது.
இந்த நிலையில் கௌதமி அந்த கட்டுமானங்களை இடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது தனக்கு மிரட்டல் வருவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் , கட்டுமான பணிகளை இடிப்பதற்காக ரூ.96 ஆயிரம் தன்னிடம் கேட்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் வாட்ஸ் அப் மூலம் வழக்கறிஞர் என்ற பெயரில் தனக்கு மிரட்டல் வருவதாகவும் இடம் பிரச்சனை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக போஸ்டர் வருவதாகவும் கூறியுள்ளார். இது தன்னை மிரட்டும் நோக்கில் இருப்பதால் தனக்கு பாதுகாப்பு அளிக்க கோரி கேட்டுக்கொண்டுள்ளார்.