தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு திருவிழா போல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சிறப்புக் காட்சிகளில் ரசிகர்கள் வெடி வெடித்து, பேனர் மற்றும் போஸ்டர்கள் அடித்து, கேக் வெட்டி, மேளதாளத்துடன் படத்தைக் கொண்டாட்டத்துடன் வரவேற்கின்றனர். அந்த வகையில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படத்தின் முதல் நாள் சிறப்புக் காட்சியின் கொண்டாட்டத்தின் போது லாரியின் மீது கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அஜித் ரசிகர் ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு எந்த படத்திற்கும் சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி அளிக்காத நிலையில், நேற்று வெளியான லியோ படத்திற்கு 9 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிட அனுமதித்தது. அதன்படி 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது.
இந்த நிலையில், திருநெல்வேலியைச் சேர்ந்த அய்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழகத்தில் முன்னணி நடிகர்களின் ரசிகர் காட்சிகளில் உரிய வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்து பொதுநல மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், சிறப்புக் காட்சிகளில் பெருங் கூட்டமாக நின்று கொண்டு பட்டாசு வெடிப்பது, பேனர்கள் மற்றும் கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்வது என பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்துவதாகவும் அதனால் அதை முறைப்படுத்த விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
பின்பு அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரசிகர்கள் காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, பொது அமைதியை பாதுகாக்கவும், சட்டம் - ஒழுங்கை பராமரிக்கவும் விதிகள் வகுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, சம்பந்தப்பட்ட உள்துறைச் செயலர் அனுப்பிய கடிதத்தை தாக்கல் செய்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், ரசிகர்கள் காட்சிகளால் எப்படி பாதிப்பு ஏற்படுகிறது என மனுதாரர் விளக்கவில்லை. அரசு உள்துறை செயலாளர் கடிதத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.