Director Ram said that Mari Selvaraj's Political Imperative of Time

மாரி செல்வராஜ் இயகத்தில் உருவாகியுள்ள வாழை படத்தின் முதல் பாடல் வெளியிட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில், சிறப்பு விருந்தினராக இயக்குநர்கள் ராம், பா.ரஞ்சித், பி.எஸ்.வினோத் ராஜ் உள்ளிட்டவர்களுடன் படக்குழுவினர்களும் கலந்துகொண்டனர்.

Advertisment

இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் ராம், “2018 ஆம் ஆண்டு இதே மேடையில் இருந்துதான் 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் நீலம் புரோடக்‌ஷன் ஆரம்பமானது. தற்போது அதே மேடையில் இருந்து வாழை மூலம் நவிஸ் ஸ்டுடியோவும் தொடங்கியிருக்கிறது. ரஞ்சித்திற்கும் நன்றி; பறியேறும் பெருமாளுக்கும் நன்றி.

Advertisment

என்னுடன் யாராவது ஏழு கடல், ஏழு மலை ஏறி இறங்கி இருக்கிறார்கள் என்றால் அது மாரி செல்வராஜ் தான். 'தங்க மீன்கள்' படத்திற்காக நாகர்கோவிலில் உள்ள அனைத்து மலைகளிலும் என்னுடன் மாரி செல்வராஜ் ஏறி இறங்கியிருக்கிறார். அப்போது அவரிடம் இருந்து நான் ஒன்றக் கண்டுபிடித்தேன். ஒரு பள்ளத்தாக்கு அளவிற்கு மாரி செல்வராஜிடம் கதை கொட்டிக் கிடக்கிறது. அவர் சொன்ன காதல் கதையெல்லாம் படமாக எடுத்தால், எடுத்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு கதை இருக்கிறது. அதிலிருந்து ஒரு சின்ன க்ரஸை எடுத்து எந்தவிதமான க்ரிஞ்சும் இல்லாமல் பண்ணிருக்கிறார்; அதுதான் வாழை.

’ஆனந்த யாழை..’ பாடல் படப்பிடிப்பு அச்சன் கோவில் மலையில் நடந்தது; அப்போது மழை பெய்ததால் அடுத்தநாள் ஷூட் நடக்குமா? நடக்காதா? என்று பயந்து இரவெல்லாம் தூங்காமல் உக்காந்திருக்கும் போது என்னுடம் மாரிதான் அமர்ந்திருப்பார். மாரி செல்வராஜ் எனக்குக் கிடத்தப் பெரிய துணைவன். அவர் கூட இருக்கும்போது எந்த மலை வேண்டுமானாலும் ஏறலாம்; இறங்கலாம். அதே 'தங்க மீன்கள்' படத்திற்காக வயநாட்டில் உள்ள ஒரு மலையில் படப்பிடிப்பு நடத்தினோம். ரொம்ப கடினமான மலை. அதில் ஏறுவதற்கு 3 மணிநேரமாகும்; இறங்குவதற்கும் 2 மணி நேரமாகும். அங்கே படப்பிடிப்பு நடத்தவே முடியாது. ஆனால் அங்கே ஒரு அருவி இருக்கும் அதனால் அந்த மலையில் படப்பிடிப்பு நடத்தினோம். ‘யாருக்கும் தோழன் இல்லை...’ என்ற பாடலை சூட் செய்தோம்; அப்போது எனக்கொரு தோழனாக இருந்தவர் மாரி செல்வராஜ்.

Advertisment

ஒரு 40 பேர் அந்த மலையில் டெண்ட் அமைத்துத் தங்கிவிட்டோம். எங்களுக்கு 6 மணிக்குள்ளே இரவு உணவு மேலே எடுத்துட்டு வந்திடனும், ஆனால் 6.30 மணியைத் தாண்டியும் சாப்பாடு வரவில்லை. 6 மணிக்கு மேல் வந்தால் மலையில் யானைக் கூட்டம் சுற்றித்திரியும். அந்தமாதிரியான சூழலில் இனிமேல் எங்கே சாப்பாடு வரப்போகிறது என்று எண்ணி பலரும் நாளைக்கு கிளம்பிடுவோம்னு சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.

அந்தச்சமயத்தில் நானே கீழேபோய் பார்க்கப் புறப்பட்ட போது என்னுடன் வந்தவர் மாரி செல்வராஜ். வழியில் வந்துகொண்டு இருக்கும் போது இட்லி சாம்பார் எல்லாம் கொட்டு நின்றுகொண்டிருந்தார்கள். அப்புறம் திரும்பவும் கீழே சென்று புதிய உணவை வாங்கி எடுத்துக்கொண்டு இரவு நானும் மாரியும் மேலே சென்றோம். யானைகள் எல்லாம் பிளிறியது. வானில் நட்சத்திரம் இருந்தது. அந்த இரவுகளை என்னால் மறக்கவே முடியாது. அப்போதுதான் எனக்குப் புரிந்தது. மாரி செல்வராஜ் மலையேறுபவன். அவரின் கால்கள் மலைஏறுவதற்காகச் செய்யப்பட்டது. எவ்வளவு எதிர்காற்று அடித்தாலும் மலையில் ஏறக்கூடியவர். அவரின் முதல் படத்தில் கறுப்பியைக் கூட்டிக்கொண்டு அச்சன் கோவில் மலையில் ஏறியதிலிருந்து தற்போது வரை மலை ஏறிக்கொண்டே இருக்கிறார். முகடுகளின் மீது கொடியை நட்டுக்கொண்டே இருக்கிறார். எதாவது மலையின் மீது அவர் கொடியை நடும்போது, அல்லது யாராவது மலையில் அவர் நட்ட கொடியைப் பற்றிப் பேசும் போது எனக்கு வருகிற சந்தோஷத்தை எப்படி வார்த்தையாக சொல்வதென்று தெரியவில்லை.

‘மாரி செல்வராஜ் மலைகள் மீது ஏறுவான். மலைகளின் முகடுகளின் மீது நிற்பான். அங்கிருந்து நம்மைக் கூவி அழைப்பான். அவனுடைய கருத்துகளை, காதலை, அன்பை, அரசியலைப் பேசிக்கொண்டேதான் இருப்பான். அதை நாம் கேட்டுத்தான் ஆகவேண்டும்; ஏனெனில் அது காலத்தின் கட்டாயம்.’” என்றார்.