மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் பொன்னியின் செல்வன் படம் குறித்து கலவையான விமர்சனத்தை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் கௌதமன், "பொன்னியின் செல்வன் படம் வெற்றி பெறுவது, வசூலை வாரி குவிப்பது எல்லாம் மகிழ்ச்சிக்குரிய விஷயம். ஆனால், 50 ஆயிரம் ஆண்டு பழமையான தமிழ் இனத்தின் வரலாற்றை கூறும் போது சரியாக சொல்ல வேண்டும். உலகத்தில் எத்தனையே பேரரசு இருந்திருக்கிறது. ஆனால் சோழ பேரரசு மட்டும் தான் 350 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே மன்னர் வழிவந்தவர்கள் ஆண்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட பேரரசை சொல்லும் பொழுது நீங்கள் தமிழ் உணர்வுடன் சொல்வது என்பது மிகவும் முக்கியமானது. சோழர்களுடைய கொடி புலிக்கொடி என்று உலகத்துக்கே தெரியும். அப்படிப்பட்ட புலிக்கொடியை உங்களால் படத்தில் காட்ட முடியவில்லை என்றால் நீங்கள் எல்லாம் எதற்காக படம் எடுக்க வேண்டும். அப்போ உங்களுடைய நோக்கம் என்ன?
பொன்னியின் செல்வன் படத்திற்கு வசனம் எழுதிய ஜெயமோகன், விஜயால சோழனுக்கு முந்தைய தலைமுறை தெலுங்கர் என்று சொல்கிறார். உங்களுக்கு எல்லாம் என்ன வரலாற்று ஆய்வு இருக்கிறது. தஞ்சையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்தவனை நீங்கள் எப்படி தெலுங்கர் என்று சொல்கிறீர்கள். கங்கைகொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக வைத்து உலகத்தில் உள்ள முக்கால்வாசி நாட்டை ஆட்சி செய்த அவனை ஒரு தமிழன் என்று ஏன் சொல்ல முடியவில்லை. அப்புறம் எதற்கு நீங்கள் இந்த படத்தை கையில் எடுத்தீர்கள்.
வெற்றிமாறன் ராஜராஜ சோழனை இந்து இல்லை என்று சொன்னதற்கு மட்டும் குதிக்கிறீங்க. ஆயிரம் வருடத்திற்கு முன்பு எங்கே இருந்தது இந்து மதம். சைவம், வைணவம் மட்டும் தானே இருந்தது. இந்து என்ற சொல்லை வெள்ளைக்காரர்கள்தான் கொண்டுவந்தார்கள். இந்து என்ற சொல் வெள்ளைக்காரன் கொண்டுவந்தது என்று இன்றைக்கு இந்துக்களின் அடையாளமாக சொல்லப்படக்கூடிய சங்கராச்சாரியார் எதிர்த்திருக்கிறார். அதையே வெற்றிமாறன் சொன்னால் மட்டும் கசப்பாக இருக்கிறதா. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழர்களுக்கு வைணவம், சைவம் என்று சமயம் இருந்திருக்கிறது. ஆனால் இந்து மதம் இல்லை. அப்படி இருக்கையில் நீங்கள் எதை மறைக்க பார்க்கிறீர்கள்.
'பொன்னியின் செல்வன்' படம் பான் இந்தியா படமாக வெளியாக வேண்டும் என்பதால் இந்துத்துவாவை பற்றி பேச வேண்டும் என்பதுதான் உங்களின் நோக்கம். இதற்கு ஏன் எங்கள் வரலாற்றை மறைக்க பார்க்கிறீர்கள். ஆதித்த கரிகாலனை யார் கொன்றது, பாண்டியர்களா கொன்றார்கள். வட தமிழகத்திற்கும், தென் தமிழகத்திற்கும் ஏன் சண்டை மூட்டி விட பார்க்கிறீர்கள். கல்கி வேண்டுமென்றால் மாற்றி எழுதியிருக்கலாம். ஆனால் தமிழனை தமிழனே கொன்றான் என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. தைரியம் இருந்தால் யார் கொன்றார்கள் என்ற உண்மையை சொல்லுங்கள். ஆளுமையுடன் படம் எடுங்கள். தமிழன் தன்னுடைய வரலாற்றை சொல்லவில்லை என்றால், தமிழன் அல்லாதவர்கள் தங்களுடைய வரலாறாக மாற்றுவார்கள் என்பது 'பொன்னியின் செல்வன்' படத்தின் மூலம் வெளியே தெரிகிறது.
இந்த மாதிரி வேலையெல்லாம் இரண்டாம் பாகத்தில் இருந்தால், மிகவும் கடுமையான எதிர் விளைவுகளை படக்குழு சந்திக்க வேண்டியிருக்கும்” என காட்டமாக தெரிவித்துள்ளார்.