/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/219_28.jpg)
சினிமா, சமூகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து 'கழுவேர்த்தி மூர்க்கன்' பட இயக்குநர் கௌதம ராஜ் தன்னுடைய கருத்துக்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். அதில் சில தொகுப்பு...
"சமூகம் எப்போதும் தீங்குகளை தன்னகத்தே வைத்துக்கொண்டு தான் இருக்கிறது. இப்போது யார் சாதி பார்க்கிறார்கள்? என்று சொல்பவர்கள் யார் என்பதை நாம் பார்க்க வேண்டும். இங்கு நகரம் வேறு, கிராமம் வேறு. நகரத்தில் சாதி பார்த்தால் வேலை நடக்காது. அதனால் யாரும் சாதி பார்ப்பதில்லை என்பது போன்ற கருத்துக்களை நகரத்தில் இருப்பவர்கள் பரப்புகிறார்கள். ஆனால் கிராமம் அப்படியில்லை. நகரத்தில் இருப்பவர்கள் சாதி பார்க்காதது போல் நடந்துகொள்வார்கள். ஆனால் அவர்களுக்குள்ளும் அந்த உணர்வு இருக்கிறது.
சமூகம் முழுவதுமே சாதிவெறியால் நிறைந்திருக்கிறது என்பது போன்ற ஒரு கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டியதில்லை. நாங்குநேரியில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட பசங்களுக்கு யார் அந்த வெறியை ஊட்டினார்கள் என்பதை அறிய வேண்டும். நிச்சயம் அவர்களுடைய பெற்றோருக்குத்தான் இதில் அதிக பொறுப்பு இருக்கிறது. ஆசிரியர்கள், நண்பர்களுக்கும் இதில் நிச்சயம் பொறுப்பு இருக்கிறது. அவர்கள் வாழும் ஊரும் அவர்களுடைய செயல்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இன்றும் ஊருக்கு வெளியே தான் தலித்துகள் வாழ்ந்து வருகின்றனர். சாதி சங்கங்களுடைய கொடிகள் கிராமங்கள் முழுவதும் இருக்கின்றன. இதற்கு முதலில் தடை விதிக்க வேண்டும். சாதிக் கட்சித் தலைவர்கள் பலரும் மிகுந்த வசதியோடு வாழ்கின்றனர். அவர்களுடைய சாதிகளுக்கு அரசாங்கம் வழங்கும் உரிமைகள் என்னென்ன என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. முதலில் அதை ஒழுங்காகச் சொல்லிவிட்டு அந்த மக்களுக்காக நிற்பதாக அவர்கள் கூறட்டும். அந்த மக்களுக்கு இவர்கள் எந்த திட்டத்தையும் பெற்றுத் தருவதில்லை. சுயநலத்துக்காக அவர்களைக் கொம்பு சீவி விடுவது மட்டுமே இவர்களுக்குத் தெரியும்.
மக்களை நல்வழிப்படுத்த இவர்கள் எந்த வகையிலும் முயல்வதில்லை. தங்களுடைய வளர்ச்சிக்காக மக்களை இவர்கள் மந்தைகள் போல் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் யாரும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதில்லை. நாங்குநேரியில் நடந்தது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பு தருமபுரியிலும், உடுமலைப்பேட்டையிலும் நடந்தவை தான். தமிழ்நாடு அரசியல் விழிப்புணர்வு பெற்ற மண் என்பதால் இதை நாம் இங்கு சீரியஸாக விவாதிக்கிறோம். வடஇந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் தினமும் நடக்கும். நாங்குநேரியில் குற்றம் செய்த மாணவனின் மனதில் நஞ்சை விதைத்தவர்கள் மீதும் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓபிசி மக்களுக்கும் பட்டியலின மக்கள் போலவே இட ஒதுக்கீடு கிடைக்கிறது. இங்கு அனைவரும் ஒரே நிலையில் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களைத் தூண்டிவிடும் வேலை தொடர்ந்து நடந்து வருகிறது. பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் தங்களுடைய படங்களில் சொல்வது அவர்களுடைய வலியை. மற்றவர்கள் பேசுவது சாதிப்பெருமையை. உணவில் சுவை இல்லை என்பதற்காக நடத்தும் போராட்டமும், உணவே இல்லை என்பதற்காக நடத்தும் போராட்டமும் ஒன்றல்ல. இந்தப் புரிதல் அனைவருக்கும் வேண்டும்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)