Skip to main content

துருவ நட்சத்திரம் பட விவகாரம் - நீதிமன்றத்தில் கௌதம் மேனன் விளக்கம்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Dhruva Natchathiram case update

 

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கெளதம் மேனன் நிறுவனம் மற்றும் இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்த நிலையில், சில பிரச்சனைகள் காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகியும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. பின்பு அனைத்து பிரச்சனைகளும் முடிந்து படத்தின் அப்டேட் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தது. ஒருவழியாக இன்று இப்படம் திரைக்கு வருவதாகப் படக்குழு அறிவித்தது. 

 

இந்தப் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கக் கோரி ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “சூப்பர் ஸ்டார் என்ற தலைப்பில் சிம்புவை வைத்து படம் இயக்க கௌதம் மேனன் கடந்த 2018 ஆம் ஆண்டு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டார். ஆனால் பட வேலைகள் நடைபெறாத நிலையில், கௌதம் மேனன் முன்பணத்தை திருப்பி தரவில்லை. எனவே அந்த தொகையை திருப்பி அளிக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இன்று காலை 10.30 மணிக்குள் 2 கோடியே 40 லட்ச ரூபாய் பணத்தை கௌதம் மேனன் திருப்பி அளிக்க வேண்டும். மேலும் தொகையை கொடுக்காமலிருக்கும் பட்சத்தில் துருவ நட்சத்திரம் படத்தை இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வெளியிடக்கூடாது என உத்தரவிட்டார். இதையடுத்து இன்று திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை. கெளதம் மேனன் அவரது எக்ஸ் தள பதிவில் “மன்னிக்கவும். துருவ நட்சத்திரம் படத்தை இன்று வெளியிட எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை. என்றாலும் எங்கள் படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவு நெகிழ வைக்கிறது. இன்னும் சில தினங்களில் வருவோம்” என குறிப்பிட்டிருந்தார். 

 

இந்த நிலையில் படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு மீண்டும் நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கௌதம் மேனன் தரப்பு, “பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்பதால் இன்று படத்தை வெளியிடவில்லை. திங்கள் அல்லது புதன்கிழமைக்குள் பணத்தை திரும்ப செலுத்தப்படும். அதன் பிறகே படம் வெளியிடப்படும்" என விளக்கமளிக்கப்பட்டது. பின்பு இந்த வழக்கு மீதான விசாரணை 27ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘சாவுக்கு துணிந்தவனுக்கு மட்டும் தான் இங்க வாழ்க்கை’ - தங்கலான் டிரெய்லர் வெளியீடு!

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
Thangalaan trailer release!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் நடிப்பில், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ள நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ஒவ்வொரு மாதமும் தள்ளி போய், இன்னும் ரிலீஸ் தேதி அறிவித்தப்பாடில்லை. 

இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகம் தங்கம் எடுப்பதற்காக அடிமைப்படுத்தப்படுகிறார்கள் போல் தெரிகிறது. அதன் மூலம் வரும் பிரச்சனை தான் இப்படத்தின் கதை என்று யூகிக்க முடிகிறது. இந்த டிரெய்லரில் அதிகமாக வசனம் இடம்பெறவில்லை என்றாலும், ‘சாவுக்கு துணிந்தவனுக்கு மட்டும் தான் இங்க வாழ்க்கை’ சில வசனம் பெரும் கவனத்தை பெறுகிறது. 

மேலும், டிரெய்லர் ஆரம்ப காட்சியிலேயே நம்மை அந்த உலகத்திற்கு ஒளிப்பதிவின் மூலம் கொண்டு செல்கிறது. இப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஏ.கிஷோர் குமார், ரிலீஸுக்கு பிறகு பேசப்படுவார் என்று கூறலாம். அதே போல், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமாரின் இசை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது வழக்கம் போல், விக்ரம் தனக்கே உரித்தான சிறந்த நடிப்பில் நம்மை கவர்கிறார். இப்படத்தின் டிரெய்லரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

Next Story

மலையாளத்தில் களம் இறங்கும் கெளதம் மேனன்!

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
gautham menon debut directorail in malayalam cinema

இயக்குநர் கௌதம் மேனன் சமீப காலமாக நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே இயக்கத்திலும் கவனம் செலுத்தி வந்த அவர், கடைசியாக ‘ஜோஷ்வா இமை போல காக்க’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இவர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் சில காரணங்களால் இன்னும் வெளியாகவில்லை. 

இதற்கிடையே கௌதம் மேனன், மலையாள நடிகர் மம்மூட்டியை வைத்து மலையாளத்தில் ஒரு படம் இயக்கப்போவதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. மேலும், இப்படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது

இந்த நிலையில், கெளதம் மேனன் - மம்மூட்டி கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இன்று கொச்சியில் பூஜையுடன் துவங்கியுள்ளது. மம்மூட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பை இன்னும் படக்குழு வெளியிடவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.  

கடைசியாக மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘டர்போ’ என்ற மலையாளப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் படம் இயக்கிய கௌதம் மேனன் இப்படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.