Skip to main content

"என் இசை பயணத்தில் இது மறக்க முடியாத படம்" - தேவி ஸ்ரீ பிரசாத் பேச்சு

Published on 16/02/2022 | Edited on 16/02/2022

 

devi sri prasad talk about pushpa movie

 

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் 'புஷ்பா' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தின் அனைத்துப் பாடல்களும் பெரும்பாலான ரசிகர்களைக் கவர்ந்தது. குறிப்பாக சித் ஸ்ரீராம் பாடிய ஸ்ரீ வள்ளி பாடல் பெரும் ஹிட்டடித்தது. இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

 

இந்நிலையில் இப்படம் குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூறுகையில், "புஷ்பா – தி ரைஸ் என் இசை பயணத்தில் மறக்க முடியாத படமாக அமைந்தது. இந்தத் திரைப்படத்தில் இசையில்  எனது புதிய அணுகுமுறையை நம்பியதற்கு சுகுமார் சார், அல்லு அர்ஜுன் மற்றும் மைத்ரி மூவிஸ் நிறுவனத்திற்கு நன்றி. பின்னணிப் பாடகர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் நடிகர்களின் மாயாஜால திரை ஆளுமை எல்லாம் தான் இந்த  வெற்றிக்கு ஆதாரமாக அமைந்தது. எனது இசைக்காக  அன்பையும் ஆசீர்வாதத்தையும் என் மீது பொழிந்ததற்கு எனது ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி, எனது வாழ்க்கை முழுவதும் உங்களிடமிருந்து இதே அளவு ஆதரவைப் பெறுவேன் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அல்லு அர்ஜுனின் புகைப்படம் இணையத்தில் வைரல்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
allu arjun Wax Statue at dubai

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன், 'புஷ்பா’ படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். மேலும் உலக அளவில் சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்த நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி விரைவில் திரைக்கு வருகிறது. இதை முடித்துவிட்டு அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அல்லு அர்ஜுனுக்கு துபாயில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. அச்சிலை புஷ்பா படத்தில் அவர் செய்யும் போஸ் ஒன்றை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள இந்த சிலையின் திறப்பு விழா நேற்று நடைபெற்றுள்ளது. நேற்றைய தினம் அல்லு அர்ஜுன் ஹீரோவாக அறிமுகமாகி 21 ஆண்டுகள் கடந்துள்ளன.

இதன் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன், மெழுகு சிலை அருகில் அதே போஸுடன் அதே ஆடையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.

Next Story

“தெய்வீக இருப்பு” - இளையராஜா குறித்து பிரபல இசையமைப்பாளர் நெகிழ்ச்சி

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
devi sree prasad about ilaiyaraaja

தமிழ் மற்றும் தெலுங்கில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தேவி ஸ்ரீ பிரசாத். கடந்த வருட தேசிய விருது விழாவில் புஷ்பா படத்திற்காக முதல் முறையாக தேசிய விருது வாங்கினார். இப்போது புஷ்பா இரண்டாம் பாகம் உள்பட சில தெலுங்கு படங்களில் பணியாற்றி வருகிறார். தமிழில், சூர்யாவின் கங்குவா, விஷாலின் ரத்னம் ஆகிய படங்களுக்கு இசையமைக்கிறார். 

இந்த நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் ஸ்டூடியோவிற்கு இளையராஜா சென்றுள்ளார். இதனை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்த தேவி ஸ்ரீ பிரசாத் அது தொடர்பாக நெகிழ்ச்சியுடன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “என் வாழ்நாள் கனவு நனவான தருணம். சிறு குழந்தையாக இருந்த நான், இசை என்றால் என்ன என்பதை அறிவதற்கு முன்பே, இந்த மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா சாரின் இசை எனக்கு ஒரு மாயாஜால மந்திரத்தை உண்டாக்கியது. நான் தேர்விற்கு படிக்கும் போது கூட, எப்போதும் என்னைச் சுற்றி அவருடைய இசை இருந்து கொண்டே இருக்கும். அவரது இசையுடன் தான் வளர்ந்தேன். அவருடைய இசையில் என்றென்றும் நான் இருப்பேன். அது ஒரு இசையமைப்பாளராக வேண்டும் என்ற விருப்பத்தையும் உறுதியையும் வலுவாக என்னுள் விதைத்தது.

நான் இசையமைப்பாளராக மாறியதும், எனது ஸ்டுடியோவை உருவாக்கிய போது, இளையராஜா சாரின் ஒரு பெரிய உருவப்படத்தை வைத்தேன். இளையராஜா சார் ஒரு நாள் எனது ஸ்டுடியோவிற்கு வருகை தர வேண்டும், அவருடைய உருவப்படத்திற்கு அருகில் நின்று நான் அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும். இதுவே எனது மிகப்பெரிய மற்றும் வாழ்நாள் கனவு. நமது ஆசைகளை நனவாக்க யுனிவர்ஸ் எப்போதும் சதி செய்வதால், இறுதியாக எனது கனவு நனவாகியது, குறிப்பாக எனது குரு ஸ்ரீ மாண்டலின் யு ஸ்ரீனிவாஸ் அண்ணாவின் பிறந்த நாளில்.

நான் இன்னும் என்ன கேட்க முடியும்! இது என் வாழ்க்கையின் மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களில் ஒன்றாகும். தெய்வீக இருப்பை எனது ஸ்டுடியோவிற்குள் கொண்டு வந்து என்னையும் எனது குழுவையும் ஆசீர்வதித்த இளையராஜாவிற்கு நன்றி. எப்பொழுதும் எங்களை ஊக்குவித்து கற்பித்ததற்கு நன்றி சார். இந்த சந்தர்ப்பத்தில், எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் இசை லேபிள்கள், என் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் குழுவிற்கு எப்போதும் எனக்கு ஆதரவாக நிற்கும் மற்றும் என் இசையை நேசிக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக தேசிய விருது வாங்கிய பின்பு இளையாராஜாவை சந்தித்து ஆசி பெற்றார் தேவி ஸ்ரீ பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது.