
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் 'மாறன்' திரைப்படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் தனுஷ் சம்மந்தப்பட்ட காட்சிகள் ஏறக்குறைய படமாக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படும் நிலையில், நடிகர் தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் நேற்று (04.08.2021) வெளியானது. தனுஷின் 44வது படமாக உருவாகவுள்ள இப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ளார். நீண்ட நாட்களாகவே இப்படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகளில் மித்ரன் ஜவஹர் ஈடுபட்டுவந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ திரைப்படங்களைப் போன்றே காதல் திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தில், நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நேற்று வெளியிட்டது. மேலும், இயக்குநர் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய படங்களில் தொடர்ந்து கேரள நடிகைகளுக்கு முன்னுரிமை அளித்துவரும் தனுஷ், இப்படத்திலும் அதே செண்டிமெண்டைப் பின்பற்றியுள்ளார்.