/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/goodbaduglyni.jpg)
அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின்னர், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வந்தது. இப்படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், திடீரென்று படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதரராபத்தில் நடந்துவந்தது. இதில் அஜித் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இப்படத்தின் அப்டேட் இன்று மாலை 6:40 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மேலும், இந்தப் படம் வருகிற 2025ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என ஏற்கெனவே படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இன்று மாலை வெளிவரும் அப்டேட், படத்தின் 2வது லுக்காக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)