ரஜினிகாந்த் தனது 170வது படமான ‘வேட்டையன்’ படத்தின் மூலம் ஜெய் பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேலுடன் இணைந்து நடித்து வந்தார். அனிருத் இசையமைக்கும் இப்படம், வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்த மாதம் இறுதியில் ரஜினிகாந்த் அந்த படத்தின் டப்பிங் பணிகளை மேற்கொள்வார் என்று தகவல் வெளியானது.
வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தனது 171வது படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். ரஜினி, இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் ‘கூலி’ படத்தின் மூலம் கைகோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லோகேஷ் கனகராஜின் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்ட்டர்களான அன்பரிவ் இந்த படத்திலும் ஸ்டண்ட் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர். மேலும், இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, விக்ரம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கிரிஷ் கங்காதரன், இப்படத்தில் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளதாக அண்மையில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். மேலும் அவர், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இன்று படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சன் பிக்சர்ஸ் கூறியதாவது, ‘சூப்பர் ஸ்டார்- லோகி சம்பவம் ஆரம்பம்... கூலி படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது’ என அறிவித்துள்ளது.