கானா பாடகி இசைவாணி, ‘ஐ எம் சாரி ஐயப்பா’ என்ற தலைப்பில் ஒரு பாடல் பாடியிருந்தார். இது தொடர்பான வீடியோவை இயக்குநர் பா.ரஞ்சித் தலைமையிலான நீலம் கலாச்சார மையம் சார்பில் வெளியிடப்பட்டது. இதையடுத்து அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனங்களைப் புண்படுத்தும் வகையில் அப்பாடல் இருந்ததாகக் கூறி 50க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கோவை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பாடகி இசைவாணி மீதும் பா.ரஞ்சித் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுத்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து நீலம் பண்பாட்டு மையம், அந்த பாடல் ஐயப்பன் சம்மந்தப்பட்ட பாடலே இல்லை என்றும் பெண்களின் பல்வேறு உரிமைகளைக் கோரும் வரிகளில் கோயில் நுழைவைக் கோரும் உரிமையும் அதில் இடம்பெற்றிருந்தது என்றும் விளக்கியிருந்தனர். மேலும் இந்த முழு உண்மையை மறைத்து, அந்த மொத்தப் பாடலும் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிரானதாக இருக்கிறது என, சமூக வலைத்தளத்தில் பொய் செய்தியைப் பரப்ப முயற்சிப்பதின் மூலம், சமூகப் பதற்றத்தை உருவாக்கி விட முடியும் என ஒரு கூட்டம் முயல்வதாக தெரிவித்திருந்தனர். அதோடு பாடகர் இசைவாணியை ஆபாசமாகச் சித்திரித்தும், தொலைப்பேசியில் மிரட்டியும், சமூகவலைத்தளத்தில் அவதூறுகளைப் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பாடகி இசைவாணி 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பாடலை பாடியிருக்கிறார். அவர் எந்த தெய்வத்தைப் பற்றியும் குறை சொல்லி பாடவில்லை. ஆனால் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் அந்த பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். தமிழக அரசு இதை உள்வாங்கி அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். யார் யாரெல்லாம் கொலை மிரட்டல் விடுகிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இசைவாணி எதாவது தவறாகப் பாடியிருந்து அதில் யாராவது உணர்வுப்பூர்வமாகப் பாதிக்கப்பட்டிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அந்த பெண்ணிற்கு எதிராக மோசமாகப் பிரச்சாரம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் தவிர்க்கவில்லையென்றால் சட்டம் தன் கடமையை செய்யும். கொலை மிரட்டல் விடுவது எந்த விதத்தில் சரியானது? காவல்துறை கவனத்திற்கும் முதலமைச்சர் கவனத்திற்கும் இதைக் கொண்டு வருகிறோம்” என்றார்.