Skip to main content

மீண்டும் சூடுபிடிக்கும் 'ஜெய் பீம்' விவகாரம்; சூர்யா மீது வழக்கு பதிவு

Published on 18/05/2022 | Edited on 18/05/2022

 

complaints registered against Surya and tj gnanavel jai bhim issue

 

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டினார்கள். இருப்பினும் வன்னியர் சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி வன்னியர் சங்கம் சார்பில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து சூர்யா மற்றும் படத்தின் இயக்குநர்  த.செ. ஞானவேல் இருவரும், "குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்தும்  எண்ணத்தில் படம் எடுக்கவில்லை" என விளக்கமளித்தனர். இருப்பினும் பாமக தரப்பு ஜெய் பீம் படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

 

இதனிடையே ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமூக மக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக கூறி படக்குழுவினர்  மீது நடவடிக்கை எடுக்க கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் நாயகர் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மேலும் அந்த புகாரில் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வேளச்சேரி காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்ததாகவும், ஆனால் அவர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். 

 

இதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நிலையில் தற்போது நடிகர் சூர்யா மற்றும் படத்தின் இயக்குநர் த.செ ஞானவேல் மீது 295(A) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சொந்த மக்கள் மீது நடத்தி வரும் வன்முறை” - சூர்யா கடும் கண்டனம்

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Suriya strongly condemns the government in the Kallakurichi illicit liquor

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராய மரணத்திற்கு பலரும் அரசுக்கு எதிராக கண்டனங்களையும் கருத்துகளையும் தெரித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சூர்ய தனது சமூக வலைதள பக்கத்தில் இனி ஒரு விதி செய்வோம்...! அதை எந்நாளும் காப்போம்...! என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது, புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில்கூட நடக்காத துயரம். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள் எனும் தகவல் அச்சமூட்டுகிறது. அடுத்தடுத்து நிகழும் மரணங்களும், பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலும் மனதை நடுங்கச் செய்கிறது. 

விஷச்சாரயத்திற்கு அன்பிற்குரியவர்களைப் பலிகொடுத்துவிட்டு அழுது துடிப்பவர்களுக்கு எத்தகைய வார்த்தைகளில் ஆறுதல் சொல்லிவிடமுடியும்? தற்போது அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஊடகங்கள், மக்கள் என அனைத்து தரப்பினரின் கவனமும், கவலையும், கோபமும் அதிகரித்திருக்கிறது. அரசும், ஆட்சி நிர்வாகமும் விரைந்து செயல்பட்டு, இழப்பைக் குறைக்க போராடிக் கொண்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால் நீண்ட கால பிரச்சனைக்கு குறுகிய கால தீர்வு என்கிற இந்த வழக்கமான அணுகுமுறை நிச்சயம் பலனளிக்காது. 

கடந்த ஆண்டு இதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாரயத்தை குடித்து 22 பேர் பலியானர்கள். அரசு தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது. இப்போது பக்கத்து மாவட்டத்தில் அதே மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து கொத்து கொத்தாக மக்கள் இறந்திருக்கிறார்கள் இப்போதுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

வாழ்வை மேம்படுத்துவார்கள் என நம்பி வாக்களிக்கும் தமிழ்நாட்டு மக்களை, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி நம்மை ஆட்சி புரிந்த அரசாங்கங்களே டாஸ்மாக் வைத்து மக்களைக் குடிக்க வைக்கிற அவலத்தைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். 'மதுவிலக்கு கொள்கை' என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் நேரத்து பேசுபொருளாக மட்டுமே முடிந்துவிடுகிறது.

டாஸ்மாக்கில் 150 ரூபாய்க்கு குடித்து போதைக்கு அடிமையானவர்கள் பணம் இல்லாதபோது 50 ரூபாய்க்கு கிடைக்கும் விஷச்சாரயத்தை வாங்கிக் குடிக்கிறார்கள். குடிக்கு அடிமையானவர்களின் பிரச்சனை என்பது தனிநபர் பிரச்சனை அல்ல, அந்த ஒவ்வொரு குடும்பத்தின், ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சனை என்பதை எப்போது நாம் அனைவரும் உணரப்போகிறோம்?

அரசாங்கங்களே குடிப்பழக்கத்தை ஊக்கப்படுத்தி சொந்த மக்கள் மீது பல ஆண்டுகளாக நடத்திவரும் வன்முறையை உடனடியாக நிறுத்தவேண்டும். குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்களை மீட்க மாவட்டம் தோறும் மறுவாழ்வு மையங்களைத் தொடங்கி அவர்களை குடி நோயிலிருந்து மீட்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் முன்னேற அரசு எத்தகைய தொலைநோக்கு செயல் திட்டங்களை நடைமுறைப் படுத்துகிறதோ, அதேபோல குடிப்பழக்கதிற்கு அடிமையானவர்களின் மறுவாழ்விற்கு முன்னுதாரணமான திட்டங்களை வகுத்து ஓர் இயக்கமாகவே செயல்படுத்த வேண்டும்.

அரசும், அரசியல் கட்சிகளும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால் மட்டுமே இனி எதிர்காலத்தில் இதுபோன்ற அவல மரணங்களைத் தடுக்கமுடியும். குறுகிய கால தீர்வைக் கடந்து தமிழ்நாடு முதல்வர் மதுவிலக்குக் கொள்கையில் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுப்பார் என மக்களோடு சேர்ந்து நானும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன். சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் விஷச்சாரயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம். இறந்த உயிர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். மருத்துவமனையில் இருப்பவர்கள் மீண்டு வர பிராத்தனை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

ரஜினியின் வேட்டையன் பட அப்டேட்

Published on 13/05/2024 | Edited on 13/05/2024
rajini vettaiyan update

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி, சென்னை, மும்பை, திருநெல்வேலி, பாண்டிச்சேரி எனப் பல்வேறு பகுதிகளில் நடந்தது. கடைசியாக பாண்டிச்சேரியில் ஒரு சண்டை காட்சி படமாக்கப்படுவதாகவும் அதற்காக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியனது. 

இதனிடையே படப்பிடிப்பு தளத்தில் ரஜினிக்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் மும்பை படப்பிடிப்பின் போது ரஜினி - அமிதாப் பச்சன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இப்படத்தில் ரஜினி சம்மந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டு முடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வழியனுப்பியது. 

இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் கூலி எனப் படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஜூனில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.