Skip to main content

பா.ரஞ்சித்திற்கு எதிராக பரமக்குடியில் புகார்

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
complaint against pa ranjith

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, வாகைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் ராஜா (வயது 35). இவர் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த 20ஆம் தேதி மதியம் 02:00 மணியளவில், தான் திருமணம் செய்து கொள்ளும் பெண் மற்றும் அவரது தோழிகளுடன் சேர்ந்து கே.டி.சி நகர் பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். பின்பு தனது வாகனத்தை எடுப்பதற்காக வெளியே வந்த போது, அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் தீபக் ராஜாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இதில் சம்பவ இடத்திலேயே தீபக் ராஜா துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாகத் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் கொலை வழக்குடன் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்த பிறகே தீபக் ராஜ் உடலை வாங்குவோம் எனக் கூறி அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்தச் சம்பவம் தமிழகத்தில் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். அந்த வகையில் இயக்குநர் பா.ரஞ்சித் நடத்தி வரும் நீலம் பண்பாட்டு மையம், அவர்களது எக்ஸ் பக்கத்தில், “திருநெல்வேலியில் மீண்டும் ஒரு சாதிய தீண்டாமை படுகொலை, நீலம் பண்பாட்டு மையம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு பாளையங்கோட்டை சிறையில் சாதிவெறி கும்பல்களால்  படுகொலை செய்யப்பட்ட முத்துமனோவின் நண்பர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சகோதரர் தீபக்ராஜா, பாளையங்கோட்டையில் உணவகத்திற்கு முன்பு படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அவலம். சக மனிதனைப் படுகொலை செய்யும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சாதிவெறி பிடித்த குற்றவாளிகளை உடனடியாக எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்கிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் பா.ரஞ்சித் தென்மாவட்டங்களில் சாதிய மோதலை தூண்டி விடுகிறார் எனக் கூறி ராமநாதபுரம் பரமக்குடி டி.எஸ்.பி சபரிநாதனிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத் தென் தமிழக கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் குறிப்பிட்ட சமுதாயத்தின் பெயரைக் குறிப்பிட்டு குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்