
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவி தற்போது 'போலா ஷங்கர்' படத்தில் நடிக்கிறார். வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான இப்படம் வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. படத்தில் கவனம் செலுத்தி வந்த சிரஞ்சீவிக்கு புற்று நோய் இருப்பதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது.
இந்நிலையில் அத்தகவலுக்கு விளக்கமளித்துள்ளார் சிரஞ்சீவி. அவர் கூறுகையில், "அண்மையில் புற்றுநோய் மையத்தை திறந்து வைக்கும்போது புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதின் அவசியத்தைப் பற்றிப் பேசினேன். தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம் என்று சொன்னேன். நான் எச்சரிக்கையாக பெருங்குடல் ஸ்கோப் சோதனையை எடுத்து புற்றுநோய் அல்லாத பாலிப்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டது என்றேன். முதலில் பரிசோதனை செய்யாமல் இருந்திருந்தால், அது புற்றுநோயாக மாறியிருக்கும் என்று மட்டும் சொன்னேன். அதனால்தான் அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும்.
ஆனால் சில ஊடக நிறுவனங்கள் இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் 'எனக்கு புற்றுநோய் வந்துவிட்டது', 'சிகிச்சையால் உயிர் பிழைத்தேன்' என்று இணையதளத்தில் வெளியிடத் தொடங்கினர். இதனால் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனது உடல்நிலை குறித்து பல நலம் விரும்பிகள் செய்திகளை அனுப்பி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் இந்த தெளிவு. அத்தகைய ஊடகவியலாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள். பொருள் புரியாமல் முட்டாள்தனமாக எழுதாதீர்கள். இதனால் பலர் அச்சம் மற்றும் வேதனை அடைந்துள்ளனர்" எனப் பதிவிட்டுள்ளார்.