இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.
அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார்.