Skip to main content

“100 ஆண்டுகளுக்கு முன்பு தீண்டாமையை உடைத்தெறிந்தது திரையரங்கம்” - வெற்றிமாறன் கண்டனம்

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

chennai theatre untouchability issue kamal and vetrimaaran post

 

சிம்பு நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் நேற்று (30.03.2023) திரையரங்குகளில் வெளியான படம் 'பத்து தல'. இப்படத்தைக் காண சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் பெண்கள் சிலர் அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் படம் பார்க்க டிக்கெட் எடுத்துள்ளனர். அவர்கள் சாலையோரம் பாசிமணி விற்பவர்கள் என்பதை அறிந்த திரையரங்க ஊழியர், அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளார். இதனால் அங்கே இருந்த ரசிகர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

 

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் பலரும் தீண்டாமை கடைப்பிடித்துள்ளதாகக் கண்டனங்கள் எழுப்பி வந்தனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் அவரது ட்விட்டர் பக்கத்தில் "அனுமதிக்க மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது" எனக் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட திரையரங்க நிர்வாகம், "இப்படம் யு/ஏ சான்றிதழுடன் வெளியாவதால் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சட்டப்படி திரைப்படத்தையும் பார்க்க அனுமதிக்க முடியாது. 2, 6, 8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்திருந்த குடும்பத்தினருக்கு எங்கள் டிக்கெட் சோதனை ஊழியர்கள் இந்த அடிப்படையில் அனுமதி மறுத்துள்ளனர்" என விளக்கம் கொடுத்திருந்தனர். மேலும், பின்பு அவர்களை அனுமதித்ததாகக் குறிப்பிட்டு அவர்கள் படம் பார்க்கும் வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்கள். 

 

இதையடுத்து இந்த விவகாரம் பெரிதாக மாற கோயம்பேடு காவல் ஆய்வாளர் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார். மேலும், அமைந்தகரை வட்டாட்சியரும் திரையரங்குக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்மணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை உள்ளே விட மறுத்த திரையரங்க பணியாளர்கள் ராமலிங்கம் மற்றும் குமரேசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.   

 

இந்த நிலையில் கமல்ஹாசன் இந்த சம்பவம் குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது" எனப் பதிவிட்டுள்ளார். 

 

மேலும் வெற்றிமாறன், "நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தீண்டாமையை உடைத்தெறிந்தது திரையரங்கம். ஆனால் இன்று உழைக்கும் எளிய மக்களை உள்ளே அனுமதிக்காமல் தீண்டாமையை கடைப்பிடித்தது ஆபத்தான போக்கு. எதிர்ப்பின் காரணமாக பின்னர் அனுமதி தந்திருந்த போதிலும், இப்படி ஒரு நிகழ்வு நடந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது" எனத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

உத்தம வில்லன் நஷ்டம்...திருப்பதி பிரதர்ஸ் கண்டன அறிக்கை!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Thirrupathi brothers about uttama villain issue

கமல்ஹாசன் நடிப்பில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான படம் உத்தம வில்லன். இப்படத்தில் இயக்குநர் பாலச்சந்தர், போஜ குமார், ஆன்ரியா, பார்வதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையமைத்திருந்தார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்  இப்படத்தைத் தயாரித்திருந்தனர். இப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. 

இந்த நிலையில் இப்படம் தொடர்பாக யூடியுப் சேனல் ஒன்று பொய்யான தகவல்களைப் பரப்புவதாக திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீபாவளி, பையா, வேட்டை, இவன் வேற மாதிரி, வழக்கு எண் 18/9, கும்கி, கோலிசோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை, ரஜினிமுருகன் போன்ற வெற்றிப்படங்களையும், தேசிய விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளையும் பெற்ற படங்களைத் தயாரித்து வெளியிட்ட எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்தான், கமலஹாசனை வைத்து முதல் பிரதி அடிப்படையில் தயாரித்த திரைப்படமான  உத்தம வில்லன், எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தையும், நிதி நெருக்கடியையும், ஏற்படுத்திய படமாகும். இது கமலஹாசனுக்கும் நன்றாகவே தெரியும். 

உத்தம வில்லன் திரைப்படத்தின் மிகப்பெரிய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக கமலஹாசனும் அவரது சகோதரர் அமரர் சந்திரஹாசனும் எங்கள் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் நடித்து தயாரித்து தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர். அதற்குண்டான வேலைகளில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் சமூக வலைத்தளமான யூட்யூப் சேனல் ஒன்று உத்தம வில்லன் மிகப்பெரிய லாபகரமான படம் என்று லிங்குசாமி கூறியதாக தவறான தகவல்களைக் கூறியுள்ளனர். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற தவறான பொய்யான தகவல்களைச் சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

Next Story

“உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும்” - திருமாவளவன் பாராட்டு 

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
thirumavalavan praised vetrimaaran gopi nainar manushi movie trailer

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தைத் தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ட்ரைலரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். ட்ரைலரை பார்க்கையில், அப்பா பாலாஜி சக்திவேலும், மகள் ஆன்ரியாவும் ஒரு வழக்கு சம்மந்தமாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கிறது. அங்கு வைத்து இருவருக்கும் காவல் துறையினருக்கும் நடக்கும் விசாரணையை வைத்து இந்த ட்ரைலர் உருவாகியுள்ளது. மேலும் எந்த வழக்கிற்காக அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர், இறுதியில் என்ன நடந்தது என்பதை அழுத்தமான காட்சிகளுடன் அரசியல் வசனங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. 

ட்ரைலரில் “போலிஸ் உன்ன தேடி வருதுனா, அது அவுங்களோட பிரச்சனை இல்லை இந்த நாட்டோட பிரச்சனை, சாதி ஜனநாயகமா, சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க” போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், இப்படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை பாரட்டியுள்ளார். அவர் பேசுகையில், “வசனங்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. இதுவும் உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும். தயாரிப்பாளரும் இயக்குநரும் முற்போக்கு பார்வையுள்ளவர்களாக இருப்பது, இந்தத் திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.