மெட்ராஸ், கபாலி, பைரவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் மைம் கோபி. இவர் குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அதன் மூலம் பெற்ற பணத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிடுவதாகச் சொல்லியிருந்தார். அதனடிப்படையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சென்னை அண்ணா நகரில் உள்ள தேன் மொழி நினைவு அறக்கட்டளை உதவியுடன் ‘வான் உலா’ எனப் பெயரிட்டு சென்னையில் இருந்து பெங்களூர் வரை அழைத்துச் சென்றுள்ளார். இதற்காக அக்குழந்தைகளுடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவர்களை நடிகர் மற்றும் இயக்குநர் சசிகுமார் வழியனுப்பி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மைம் கோபி, “இங்க இருக்கிற எல்லா மக்களும் என்னுடைய மக்கள். அதனால் இது உதவி கிடையாது. கடமை. எனக்கு விமானத்தில் போக 30 வருஷம் மேல் ஆனது. இந்த வாய்ப்பு இந்த குழந்தைகளுக்கு எப்போது கிடைக்கும். அதை ஏன் கொடுக்கக்கூடாது. இன்னொருத்தரை சந்தோசப்படுத்தி பார்ப்பதற்குத்தான் இந்த ஏற்பாடு. சந்தோஷம் எந்தளவிற்கு கூடுதோ ஆயுள் கூடும் என்பார்கள். ஆயுள் கூடுவதற்கு நன்றாக சிரிக்கணும். இந்த குழந்தைகள் நன்றாக சிரித்தாலே நோய் விட்டுப் போய்விடும்.
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்ற கூற்றுக்கு எடுத்துக்காட்டு தான் இந்த உலா. விமானத்தில் முதல் தடவை பறக்கும் போது, நம்மை அறியாமல் பட்டாம்பூச்சி பறக்கும். இது வெறும் துவக்கம் தான். இன்னும் 3 மாதம் கழித்து இன்னொரு சூப்பரான விஷயத்தை பண்ணப் போகிறோம். பிறவியிலே பார்வையில்லாத, வாய் பேசாத, காது கேட்க முடியாத பிள்ளைகளை கூட்டிப் போக திட்டமிட்டிருக்கிறோம். அதையும் தாண்டி குழந்தைகளுக்கான நூலகம் ஆரம்பிக்கிறோம்” என்றோம்.