/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/31_40.jpg)
சினிமா விமர்சகரும் இயக்குநருமான கேபிள் சங்கர், ‘மாநாடு’ ரிலீஸில் இருந்த சிக்கல்கள் உட்பட சமீபகாலமாக பட ரிலீஸில் அதிகரித்திருக்கும் சிக்கல்கள் மற்றும் சமகால திரையுலகின் போக்கு எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் பகிர்ந்துகொண்டார். அவை பின்வருமாறு...
"‘மாநாடு’ படத்தின் பட்ஜெட் 25 கோடிக்கு மேல்தான் இருக்கும். நீண்டநாள் ப்ரொடக்சன், கரோனா காரணம், அதனால் ஏற்பட்ட வட்டி என 30 கோடிவரை தயாரிப்பாளர் செலவழித்திருப்பார். இந்தப் படம் வெற்றிப் படமா என்றால் நிச்சயம் லாபகரமான படம்தான். முதல் இரு நாட்களிலேயே மிகப்பெரிய தொகையைப் படம் வசூல் செய்துள்ளது. 35 முதல் 40 கோடிவரை படத்திற்கு ஷேர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைக்கு பைனான்சியரை நம்பி படமெடுக்கும் பழக்கம் தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளது. ஒரு ஆர்ட்டிஸ்ட்டின் கால்ஷீட் கிடைத்தவுடன் அதை வைத்து உடனே பைனான்சியரிடம் பணம் வாங்கிவிட முடியும். கையில் பணமே இல்லாமல் மொத்த பணமும் பைனான்சியரிடமிருந்து வாங்கிப் படம் எடுப்பதால் எதிர்பார்த்த வியாபாரம் நடக்காதபோது பிரச்சனை ஏற்படுகிறது. இதுவே நாம் பாதி பணம் போட்டு, மீதி பணத்தை பைனான்சியரிடம் வாங்கிப் படம் எடுத்தால் இந்தப் பிரச்சனையைத் தவிர்க்கலாம். பணத்தை செட்டில் செய்யாமல் படம் ரிலீஸ் செய்ய முடியாது. அதனால்தான் தற்போது அனைத்து படங்களின் ரிலீஸின்போதும் பிரச்சனை ஏற்படுகிறது.
படத்திற்குப் பின்னால் உள்ள பிரச்சனைகள் என்ன, படத்தின் வசூல் என்ன, படம் வெற்றியா தோல்வியா என்பதெல்லாம் ரசிகர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தேவை இல்லை. படம் ரசிக்கும்படி உள்ளதா இல்லையா என்பதுதான் ரசிகனுக்குத் தேவையான விஷயம். இந்தப் படம் இவ்வளவு வசூல்... அந்தப் படம் இவ்வளவு வசூல் என்ற நம்பர் கணக்கெல்லாம் ஊடங்களுக்குத்தான் தேவையாக இருக்கிறதேயொழிய, ரசிகர்களுக்குத் தேவை இல்லை. இந்த வசூல் நம்பர் எல்லாமே பொய்தான். இந்தப் படம் இவ்வளவு வசூல் செய்துள்ளது என்று தோராயமாக சொல்லலாமேயொழிய, துல்லியமாகச் சொல்ல முடியாது. அது தெரிவதற்கு நாளாகும்.
‘அண்ணாத்த’ படத்திற்குப் பெரும்பாலான மக்களிடம் எதிர்மறையான விமர்சனங்களே இருந்தன. ‘மாநாடு’ படத்திற்குப் பெரிய அளவில் எதிர்மறை விமர்சனங்கள் இல்லை. எனவே இந்தப் படம் ‘அண்ணாத்த’ படத்தோடு வெளியாகி ஹிட்டாகியிருந்தால் இன்னும் பெரிய விஷயமாக இருந்திருக்கும்" என்றார்.
சாதியம் தொடர்பான விவாதங்கள் சமீபகாலமாக அதிகரித்திருப்பது குறித்து அவரிடம் கேட்கையில், "எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டவர்கள் குரல் ஒலிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதோ, அங்கெல்லாம் அந்தக் குரல் ஒலிக்க வேண்டும். அதைச் செய்வதற்கான சுதந்திரமும் பொறுப்பும் அனைவருக்கும் உள்ளது. இன்றைக்கு அந்தக் குரல் அதிகமாக ஒலிக்கிறது என்றால் அதற்குக் காரணம் அது கமர்ஷியல் வெற்றியடைவதால்தான்.அன்று இருந்த மக்கள் மனநிலைக்கு ஏற்ப ‘தேவர் மகன்’, ‘சின்ன கவுண்டர்’ என சாதிப்பெயர்களோடு அன்றைக்குப் படம் வந்தது. இன்றைக்கு சோசியல் மீடியா காலத்தில் ‘தேவர் மகன்’ படம் வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று தெரியாது. உயர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடுக்கப்பட்டவர்கள் குறித்து படம் எடுத்தால் அந்தப் படத்தை இங்குள்ளவர்கள் கொண்டாடுவதில்லை. அவர் ஒடுக்கப்பட்டவர்கள் கூட்டத்தில் இல்லை எனும்போது அவர் படத்தை நான் ஏன் கொண்டாட வேண்டும் என்ற மனநிலை இங்குள்ளது" என்றார்.
ஐ.எம்.டி.பி தளம் குறித்து கேட்கையில், "ஐ.எம்.டி.பி. தளத்தில் யார் ஓட்டுப்போட முடியுமென்றால் அந்தத் தளத்தில் பதிவு செய்துள்ள பயனாளர்கள் படத்திற்கு ஓட்டு போடமுடியும். உங்கள் படத்திற்கு அதிக ரேட்டிங் வேண்டுமென்றால் நான் அதை ஒரு மார்கெட்டிங்காக வைத்து நிறைய பேரை ஓட்டு போட வைக்க முடியும். இது ஒரு விளம்பர உத்தி, அவ்வளவுதான். ஐ.எம்.டி.பி. தளத்தினுடைய ஓனரே அமேசான்தான்" எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)