இயக்குநர் மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' பட வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தின் பணிகளில் பிசியாக உள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் ரூ.500 கோடி வசூல் குவித்து சாதனை படைத்துள்ளதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை எழுதிய எழுத்தாளர் கல்கியின் வாழ்க்கை வரலாறு ‘கல்கி: பொன்னியின் செல்வர்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. இதனை பத்திரிகையாளர் எஸ்.சந்திரமவுலி எழுதியுள்ளார். கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார். முதல் பிரதிகளை கல்கியின் பேத்திகளான சீதா ரவி, லட்சுமி நடராஜன் பெற்றுக்கொண்டனர்.
இது குறித்து மணிரத்னம், "அமரர் கல்கியின் எழுத்துகள் தலைமுறைகள் தாண்டி ரசிக்கப்படுவது அவரது எழுத்தின் ஈர்ப்புக்கு சாட்சி. பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியாக இருக்கும் நிலையில் அவர் வாழ்க்கை வரலாறு வெளியிடப்படுவது பொருத்தமானது” என்று நெகிழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.