இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் நீண்ட காலமாக பருத்திவீரன் படம் தொடர்பாகப் பிரச்சனை நடந்து வருகிறது. இது தொடர்பாக சமீபத்திய பேட்டியில் பேசிய ஞானவேல் ராஜா, அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்தார். இதையடுத்து அதை மறுத்து அமீர் அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சசிகுமார், சமுத்திரக்கனி, பொண்வண்ணன் உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவாக நின்றனர். மேலும் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக காட்டமாக அவர்களது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.
அந்த வகையில், கரு.பழனியப்பன், “எகத்தாளமாய் எப்படி ஒருவரால் இத்தனை பொய் சொல்ல முடிகிறது? அமீரை திருடன் என்றும் பொய் கணக்கு எழுதுபவர் என்றும் சொல்லுகிறாரே. இப்படி பேச ஞானவேலுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது? என்று கேட்டிருந்தார் சமுத்திரக்கனி. இந்தக்கேள்வி எழும்போதே ஞானவேலின் பின்னால் சிவக்குமாரும் அவர் பிள்ளைகளும் இருப்பார்களோ என்று சந்தேகத்தின் நிழல் விழுவதைத் தவிர்க்க முடியவில்லை. நூறு குறள்கள் படித்த சிவக்குமார் ‘அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை’என்ற குறளையும் படித்து இருப்பார். வள்ளுவர் வாக்கு பொய்க்காது என்று அறிந்த அவர், ஞானவேலை பொதுவெளியில் இயக்குனர் அமீரிடம் மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும். சிவக்குமார் சொல்லுவார் என்று நம்புகிறேன்” என காட்டமாக ஒரு அறிக்கை வெளியிடிருந்தார்.
இந்த நிலையில் பாரதிராஜா இந்த விவகாரம் தொடர்பக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ஞானவேல் அவர்களே, உங்களுடைய காணொளியை பார்க்க நேரிட்டது. பருத்தி வீரன் திரைப்படம் சார்ந்து உங்களுக்குள் இருப்பது பொருளாதர பிரச்சனை சார்ந்தது மட்டுமே. ஆனால், நீங்கள் தந்த பேட்டியில் மிகச்சிறந்த படைப்பாளியின் புகழுக்கும், பெயருக்கும், படைப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கதக்கதாகும். உங்களை திரைத்துறையில் அடையாளப்படுத்தி, மிகப்பெரும் தயாரிப்பாளராக உருவாக்கியதில் அமீரின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதை மறந்துவிட வேண்டாம்.
பருத்தி வீரன் திரைப்படத்திற்கு முன்பு அமீர் இரண்டு படம் இயக்கி, அதில் ஒன்றைத் தயாரித்தும் இருக்கிறார். அவர் உங்கள் படத்தில் தான் வேலை கற்றுக் கொண்டார் என்பதை எக்காளமாக கூறி வன்மமாக சிரிப்பது என்போன்ற படைப்பாளிகளையும் அவமதிக்கும் செயலாகும்..! ஏனென்றால் உண்மையான படைப்பாளிகள் சாகும் வரை கற்றுக்கொண்டேதான் இருப்பார்கள். நான் இப்போதும் கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன். மிகச் சிறந்த படைப்பாளியின் படைப்புகளையும், அவர் நேர்மையையும் இழிவுபடுத்தியதற்காக வருத்தம் தெரிவித்து, பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்ப்பதே சரியாக இருக்கும் என நம்புகிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
pic.twitter.com/LneWqhAMyq— Bharathiraja (@offBharathiraja) November 28, 2023