மலையாளத் திரையுலகில் இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் பாலச்சந்திர மேனன். இரண்டு தேசிய விருதுகளையும் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருதையும் வாங்கியுள்ளார். பூஷன் இவர் மீது ஒரு நடிகை கடந்த செப்டம்பரில் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இந்தியத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பிறகு கொடுத்தார். அந்த புகாரில், 2007ஆம் ஆண்டு ‘தே இங்கோட்டு நோக்கியே’ படப்பிடிப்பின் போது ஹோட்டலுக்கு வரவழைத்து தன்னிடம் அத்துமீறியதாக குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து பாலச்சந்திர மேனன் மீது திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக முன்ஜாமீன் கோரி பாலச்சந்திர மேனன் கேரள உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை மீண்டும் நீதிபதி குன்ஹிகிருஷ்ணன் முன்பு வந்தது. அப்போது பாலச்சந்திர மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பாலச்சந்திர மேனனின் நற்பெயரை கலங்கம் ஏற்படுத்தும் வகையில் 17 ஆண்டுகளுக்குப் முன்பு சம்பவம் நடந்ததாக கூறி புகார் கொடுத்துள்ளது. அதோடு அந்த நடிகையின் வழக்கறிஞர் பாலச்சந்திர மேனனை மிரட்டினார்” என கூறினார். இதையடுத்து தீர்பளித்த நீதிபதி, “ஒரு பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அதுவும் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெருமையும் கண்ணியமும் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் உண்டு என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்” என கூறி பாலச்சந்திர மேனனுக்கு முன் ஜாமீன் வழங்கினார்.
மேலும், “பாலச்சந்திர மேனன் முதல் இரண்டு வாரங்களுக்குள் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். விசாரணை அதிகாரி கைது செய்ய முன் வந்தால், அவர் ரூ.50 ஆயிரத்துக்கான பத்திரத்தை இரண்டு நபர் ஜாமீன்களுடன் பிணையில் விடுவிக்கப்படுவார்” என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.