bala gives ambulance to tirupathur district peoples

சின்னத்திரையில் பிரபலமாகி பின்பு வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார் பாலா. அவர் சம்பாதித்த பணத்தின் மூலமாகப் பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். முன்னதாக பழங்குடியின மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார். கடந்த மாதம், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் உள்ள பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரால் வீட்டில் தவித்து வரும் மக்களுக்கு 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து மேல்மருவத்தூர் அருகே கோட்டகயப்பாக்கம் கிராமத்தில் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி வாங்கிக் கொடுத்தார். அண்மையில் தாம்பரத்தில் உள்ள அனகாபுத்தூர் பகுதியில் மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ சேவைக்காக இலவச ஆட்டோ சேவையை வழங்கினார். இப்படி தொடர்ந்து பாதிக்கப்பட்ட மற்றும் பலதரப்பட்ட மக்களுக்கு பாலா உதவி செய்து வருவது பலரது பாராட்டைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அருகேயுள்ள நெக்னாமலை என்ற கிராமத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினார். இந்த கிராமத்தில் சாலை வசதி இல்லாமலும், உடல் நலத்தால் பாதிக்கப்படுவோர் 7 கிலோமீட்டர் மலைப்பாதையில் டோலி கட்டி செல்லும் நிலை இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தியை அறிந்த பாலா ஆம்புலன்ஸ் உதவியை செய்துள்ளார்.