தமிழ்த் திரையுலகின் 40 முன்னணி நடிகர்கள், ஆளுமை மிக்க இயக்குநர்கள், மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றியிருக்கும் ‘நவரசா’ ஆந்தாலஜி திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று 190 நாடுகளில் வெளியாகிறது. மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி, ஆச்சரியம் ஆகிய உணர்வுகளை மையமாகக் கொண்டு ஒன்பது பகுதிகளாக உருவாகியுள்ள இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் கியூப் சினிமா டெக்னாலஜீஸ் இணைந்து தயாரித்துள்ளன. ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ட்ரைலர், தற்போது வெளியாகி வைரலாகி வரும் நிலையில், இந்த ஆந்தாலஜி படத்தின் ''துணிந்த பின்" கதையில் அனுபவமில்லாமல் தடுமாறும் காவல் அதிகாரி 'வெற்றி' பாத்திரத்தில் அதர்வா நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் இயக்குநர் சர்ஜூன் கே.எம் உடன் இணைந்து பணிபுரிந்த அனுபவம் மற்றும் வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடித்தது பற்றி நடிகர் அதர்வா முரளி தற்போது பேசியுள்ளார். அதில்...
"இயக்குநர் சர்ஜுன் இந்த படத்தின் திரைக்கதையை பற்றி விவரிக்கும் போது, எந்த உணர்வை பற்றிய கதையை சொல்லப்போகிறார் என்பதை தெரிந்துக் கொள்ள ஆவலாக இருந்தேன். இந்தப் படம் தைரியத்தை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளது என்று அவர் விவரித்த பின்னர் என் மனம் சந்தோஷத்தின் உச்சிக்கு சென்றது. நான் ஸ்பெஷல் டாஸ்க் போர்சில் உள்ள ஒரு சிறப்பு அதிகாரியாக நடிக்கவுள்ளேன் என்று கூறியபோது, ஆடம்பர காவல் அதிகாரி உடையில் மிக ஸ்டைலாக என்னை நானே கற்பனை செய்து கொண்டேன். இந்தப்படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இயக்குநர் சர்ஜுன் உடன் பணி புரிந்தது மற்றும் வெற்றி என்ற கதாபாத்திரத்தை செய்தது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது" என்றார்.