![arjun das speech in por press meet](http://image.nakkheeran.in/cdn/farfuture/fCz8TvBRa6xUIWLjMZhmhE6fCzsfr60McEHw7YrCQkE/1709043789/sites/default/files/inline-images/01_110.jpg)
பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் நாயகர்களாக நடித்திருக்கும் திரைப்படம் ‘போர்’. டி.ஜே. பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி என இரட்டை மொழிகளில் வரும் மார்ச் 1 முதல் வெளியாகவிருக்கிறது. டி.சீரிஸ் மற்றும் ரூக்ஸ் மீடியா இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் போன்றோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் அர்ஜுன் தாஸ் பேசுகையில், “இப்படத்தில் வாய்ப்பு கொடுத்த பிஜோய் நம்பியாருக்கு என் முதல் நன்றி. எனக்கு இப்படத்தின் கதையை ஒரு ஹோட்டலில் வைத்து தான் கூறினார். அதற்கு முன்னரே காளிதாஸ் படத்தில் புக் ஆகி இருந்தார். படப்பிடிப்பின் போது இயக்குநர் எங்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார். பொதுவாக இரு மொழிகளில் ஒரு படத்தின் ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கும் போது, ஒரு மொழியில் நடிப்பவர்களுக்கு பிற மொழியில் எடுக்கப்பட்ட காட்சிகளைக் காட்ட மாட்டார்கள். ஆனால் பிஜோய் எங்களுக்கு அதையும் காட்டிவிட்டு இயல்பாக நடிக்கச் சொன்னார். படத்தில் எங்கள் அனைவருக்கும் பேருதவியாக இருந்த உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. காளிதாஸ் ஷூட்டிங்கில் இருப்பதால் இங்கு வர முடியவில்லை. அவருக்காக நான் உங்களிடம் மன்னிப்பும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.
போர் திரைப்படம் ஒரு கல்லூரி கால வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். கொண்டாட்டத்திற்கான திரைப்படம், நட்பும் படத்தில் சிறிய அளவில் இருக்கிறது. வேறு வேறு விதத்திலான உணர்வுகள் படத்தில் கொட்டிக் கிடக்கிறது. காளிதாஸ் ஜெயராமுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஏனென்றால் படப்பிடிப்பு தளத்தில் டேக் செல்வதற்கு முன்பு வரை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். ரொம்பவே சேட்டை செய்வார். மற்றபடி மிகச் சிறந்த நண்பன். காளிதாஸ் உடன் சேர்ந்து நடித்த அனுபவம் மகிழ்ச்சியானது” என்றார்.