அண்மையில் பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா புர்கா அணிந்துள்ள புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து, “எனக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மிகவும் பிடிக்கும். ஆனால், அவரது அன்பு மகளைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவது போல் உணர்கிறேன். பாரம்பரியம் மிக்க ஒரு குடும்பத்தில் உள்ள படித்த பெண்கள் கூட எளிதாக மூளைச்சலவை செய்யப்படுவது உண்மையில் வேதனையளிக்கிறது” என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த விமர்சனத்திற்கு விளக்கம் தரும் விதமாக ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா இன்ஸ்டாவில், “அன்புள்ள தஸ்லிமா, என்னுடைய ஆடையால் உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதில்லை. உண்மையான பெண்ணியம் என்றால் என்ன என்று கூகுள் செய்து பார்க்கவும். ஏனென்றால் அது மற்ற பெண்களைத் தரக்குறைவாகச் சாடுவதும் இந்த விவகாரத்தில் அவர்களது தந்தையை இழுத்துப் பேசுவதும் அல்ல. மேலும் உங்களுடைய ஆய்வுக்காக என்னுடைய எந்த புகைப்படத்தையும் நான் அனுப்பியதாக எனக்கு நினைவில்லை” என்று பதிவிட்டிருந்தார்.
இதே விமர்சனம் கடந்த ஒரு வருடங்களாக ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜாவின் மீது முன்வைக்கிறார்கள். அதற்கு அவர் என்னுடைய நம்பிக்கை இது அதை ஏன் நீங்கள் பெரிதாக எடுத்துக்கொண்டு எனது தந்தையை விமர்சிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகிறார்.
இந்நிலையில் இந்த விமர்சனம் குறித்து ரஹ்மானிடம் ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர், “'ஒரு ஆண் புர்கா அணிய அனுமதி கிடையாது. இல்லையென்றால் நானும் ஒரு புர்காவை அணிந்திருப்பேன். வெளியே செல்வதற்கும், ஷாப்பிங் செய்வதற்கும், நிலையான வாழ்வுக்கும் அது எளிதாக இருக்கும். கதிஜா தன்னுடைய சுதந்திரத்தைக் கண்டுகொண்டார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் வீட்டுப் பணிப்பெண்ணின் தாயாருக்கு அஞ்சலி செலுத்த செல்லக்கூடியவர். அவருடைய எளிமையும் அவருடைய சமூகத்துடன் அவர் இயங்கும் விதமும் என்னை ஆச்சரியப்படுத்துகின்றன” என்று பதிலளித்தார்.