Skip to main content

எளிமையாக நடந்த மகளின் திருமணம், அம்மாவை நினைவு கூறும் ஏ.ஆர் ரஹ்மான்; குவியும் வாழ்த்துக்கள்

Published on 06/05/2022 | Edited on 06/05/2022

 

ar rahman daughter khatija gets married riyasdeen

 

பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான், ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, தமிழ், இந்தி, தெலுங்கு என பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மான் மிகக் குறுகிய காலத்திலேயே இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளரானார். மேலும், 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தின் இசைக்காக பெரிதும் பேசப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மான், அப்படத்திற்காக இரு ஆஸ்கார் விருதுகளையும் வென்றார்.  

 

இவர்  கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அமீர் என்ற மகனும் கதீஜா, ரெஹிமா என்ற இரு மகள்களும் உள்ளனர். இதில் கதீஜாவுக்கும் தொழிலதிபரும் ஆடியோ இன்ஜினியருமான ரியாஸ்தீன் ஷேக் என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

 

இந்நிலையில்  ஏ.ஆர் ரஹ்மான் மகள் கதீஜா மற்றும் ரியாஸ்தீன் ஷேக் ஆகியோரின் திருமணம் நேற்று எளிய முறையில் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தனது மகள் கதீஜாவின் திருமண புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர் எல்லாம் வல்ல இறைவன் அவர்களை ஆசிர்வதிக்கட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஏ.ஆர் ரஹ்மானின்  குடும்ப உறுப்பினர்களோடு மறைந்த அவரது அம்மா கரீமா பேகத்தின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. மகளின் திருமணத்திலும் தாயை நினைவுகூறும் ஏ.ஆர் ரஹ்மானின் செயலுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வரும் நெட்டிசன்கள், அவரது மகள் திருமணத்திற்கு வாழ்த்துகளையும் கூறிவருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.