நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்குத் தடுப்பூசி மற்றும் கரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் நிலையில், நடிகர் அமிதாப்பச்சன் ஊரடங்கு தளர்வுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். அதில்...
"சில பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. எனினும் தயவுசெய்து அலட்சியமாக இருக்க வேண்டாம். விதிமுறைகளைக் கடைப்பிடியுங்கள். கைகளைக் கழுவுங்கள், முகக்கவசம் அணியுங்கள், அவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்லுங்கள். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். அனைத்தும் சரியாகிவிட்டது என்பதைப்போல அலட்சியமாக இருக்க வேண்டாம். உண்மை அதுவல்ல. விதிமுறைகளை நாம் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவர்கள் கூறும் வழிமுறைகளைத் தயவுசெய்து பின்பற்றுங்கள்" என கூறியுள்ளார்.