அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் 'புஷ்பா – தி ரைஸ்'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தானா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இவர் இசையில் வெளியான அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக சமந்தா சிறப்புத் தோற்றத்தில் நடனமாடிய 'ஊ...சொல்றியா மாமா' பாடலை இளைஞர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'புஷ்பா 2' படத்திற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.
இதனிடையே சில தினங்களுக்கு முன்பு 'புஷ்பா 2' படத்தின் திரைக்கதை விவாதத்தில் இயக்குநர் புச்சி பாபு சனா இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் புச்சி பாபு சனா மற்றும் 'புஷ்பா 2' இயக்குநரும் கதை விவாதத்தில் இருப்பது போல் ஒரு புகைப்படமும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இணையத்தில் வைரலான புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து இந்த தகவல் தொடர்பாக விளக்கமளித்துள்ளார். அந்த பதிவில், "சுகுமார் சார் என் படக் கதைக்கு உதவ வந்தார். சுகுமார் சாரின் படத்தின் கதையை உட்கார்ந்து விவாதிக்கும் தகுதி எனக்கு இல்லை" என தெரிவித்துள்ளார்.
புச்சி பாபு சனா, இயக்குநர் சுகுமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு பஞ்ச வைஷ்ணவ் தேஜ், கிருத்தி ஷெட்டி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 'உப்பெனா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.