துணிவு படத்திற்கு பிறகு அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்க, அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. இது தொடர்பான வீடியோக்கள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகியது. அதில் அஜித், ஆரவ் இருவரும் கார் ஸ்டண்ட் செய்வது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்து. இதையடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. பின்பு அஜர்பைஜானில் நடந்த படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் போலவே அடுத்தடுத்து படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் லுக் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் மிட் நைட்டில் வெளியாகியுள்ளது. அதில் காரின் பின்புற லக்கேஜ் வைக்கும் இடத்திலிருந்து கை, கால் கட்டிய நிலையில் இருக்கும் ஒருவரை மூன்று பேர் சேர்ந்த கும்பல் வெளியில் எடுத்து சாலையில் போடுகின்றனர். பின்பு துப்பாக்கியுடன் எண்ட்ரீ கொடுக்கும் அர்ஜூன் ஒருவரை சுடுவதுபோல் காட்டியுள்ளனர். அந்த காட்சிக்கு பிறகு அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா ஆகியோர் சிரித்தபடி டீசர் தொடங்குகிறது. அதன் பின்பு அதே போல் கார் லக்கேஜ் வைக்கும் பின்புற கதவை ஓப்பன் செய்து அஜித் குமார் எண்ட்ரீ கொடுக்க, த்ரிஷாவுக்கும் அவரும் படத்தில் பேசி சந்தோஷமாக ஒரு ரெஸ்டாரண்டில் இருக்கின்றனர்.
இதையடுத்து வரும் காட்சிகளில் சோகமுடன் வரும் அஜித்குமார், திடீரென ஆக்ரோஷமாக இரத்த வெள்ளத்தில் வருகிறார். அதைத் தொடர்ந்து காருக்கு வெளியிலிருந்து அஜித்தும் காருக்குள் ஆரவ்வும் துப்பாக்கி ஏந்தியபடி உள்ளனர். இதற்கிடையில் ‘எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு’ என்ற வசனத்துடன் கார் சேசிங் மற்றும் சண்டைக் காட்சிகள் வருகிறது. அதற்கேற்ப அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ‘கடவுளே அஜித்தே’ என அஜித்தின் ரசிகர்கள் வீடியோக்களை பகிர்ந்து வரும் அதே சாயலுடன் பின்னணியில் ‘முயற்சி... விக்டரி...’ என்ற வசனங்களுடன் டீசர் முடிகிறது.