Skip to main content

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படக்குழு மீது விசாரணை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

 

aishwarya rajinikanth thiruvannamalai issue regards lal salaam movie

 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா தயாரிக்கும் இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் ஆரம்பமானது. தொடர்ந்து படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் திருவண்ணாமலை தாசில்தார் அலுவலகத்தில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதற்காக திருவண்ணாமலை தாசில்தார் அலுவலக பெயர்ப் பலகை மாற்றப்பட்டு, நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - சங்கராபுரம் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டது. 

 

படப்பிடிப்பு நடந்து வரும் தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் படப்பிடிப்பை காண அங்கு திரண்டுள்ளனர். அவர்களிடம் படக்குழுவை சார்ந்த பவுன்சர்கள் கடுமையாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. வட்டாட்சியர் அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள அரசு விடுதிக்கு மாணவிகள் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டதாகவும் இ-சேவை மையத்துக்கும் பொதுமக்கள் செல்ல முடியாதபடி சுற்றியும் கயிறு கட்டியதாகக் கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் படப்பிடிப்பு நடத்தியதாகக் கூறி லால் சலாம் படக்குழுவினரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.