Skip to main content

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருட்டு; விசாரணையில் பகீர் தகவல் - பணிப்பெண் கைது

 

aishwarya rajinikanth jewels issue homemaid eeshwari arrested

 

நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டையில் செயிண்ட் மேரிஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வருகிறார். கடந்த மாதம் தனது வீட்டிலுள்ள லாக்கரில் இருந்த நகைகளைக் காணவில்லை என சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

 

அந்த புகாரில், 2019ம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை மூன்று முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை. சென்னை செயிண்ட் மேரிஸ் சாலை வீடு, தனுஷின் சிஐடி நகர் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீடு என மாறி மாறி நகைகள் லாக்கரில் வைக்கப்பட்டிருந்து. நகைகளை லாக்கரில் வைத்திருந்தது தனது வீட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தெரியும். வீட்டில் பணிபுரியும் பணியாளர்களே நகைகளைத் திருடி இருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் வைர நகைகள், நவரத்தினக் கல் மற்றும் 60 சவரன் தங்க நகைகளைக் காணவில்லை என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

ஐஸ்வர்யா அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பாக ஐஸ்வர்யா வீட்டில் பணிபுரியும் 3 நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் மந்தைவெளியை சேர்ந்த ஈஸ்வரி என்ற பணிப்பெண் நகையை திருடியது தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து முதற்கட்டமாக 20 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் ஆச்சரியமூட்டும் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

2019 ஆம் ஆண்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை திருடி விற்பனை செய்துள்ளார். அதன் மூலம் வந்த பணத்தை அவரது கணவர் வங்கி கணக்குக்கு பரிவர்த்தனை செய்துள்ளார். மேலும் அண்மையில் சோழிங்கநல்லூரில் 95 லட்சம் ரூபாய்க்கு நிலம் வாங்கியுள்ளார். இதற்காக வங்கியில் கடன் வாங்கிய ஈஸ்வரி அதனை இரண்டே வருடங்களில் கட்டி முடித்துள்ளார். 6 மாதங்களுக்கு முன்பு திடீரென வேலையை விட்டு நின்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மேலும் வேறு யாரிடமாவது திருடியுள்ளாரா என்று விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது போலீஸ். இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.