
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் மலையாளத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்த 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மேடையில் பேசிவிட்டு பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த ஐஸ்வர்யா ராஜேஷ் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அவர் கூறுகையில், "இந்த படத்தில் ரொம்ப என்ஜாய் பண்ணி தான் நடிச்சேன். பெண்களின் வாழ்க்கை ஒரு சமையல் அறையில் மட்டுமே முடிந்து போக கூடாது. அவர்களுக்குள் இருக்கும் திறமையை உலகத்திற்கு வெளிக்கொண்டு வரணும். அந்த வகையில் இந்த படம் ஒரு முக்கியமான படமாக பார்க்கிறேன்" என்றார்.
மேலும் சபரிமலையில் பெண்கள் நுழைவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு "கடவுள் அனைவருக்கும் ஒன்று தான். ஆண், பெண் என்ற எந்தவொரு வித்தியாசமும் என்னை பொறுத்தவரை இல்லை. என் கோவிலுக்கு இவுங்க வரக்கூடாது, இவுங்க தான் வரணும்னு எந்த கடவுள் சொல்லிருக்காரு. யாருமே அப்படி சொன்னது கிடையாது. இதெல்லாம் நாம் உருவாக்கிய சட்ட திட்டங்கள் தான். மக்கள் சில விஷயங்களை நம்புகிறார்கள். ஆனால் கடவுளுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு அதன் மீது நம்பிக்கை இல்லை" எனக் கூறினார்.