பாலிவுட் முன்னணி நடிகரான நானா படேகர், தமிழில் பொம்மலாட்டம், காலா போன்ற படங்களில் நடித்துள்ளார். தேசிய விருது, பிலிம் ஃபேர் விருது போன்ற விருதுகளை வாங்கிய நானா படேகர் மீது கடந்த 2018ஆம் ஆண்டின் போது, இந்தி நடிகை தன்ஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.
தமிழில் விஷாலின் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்த தனுஸ்ரீ தத்தா, ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்ற படத்தில் 2008ஆம் ஆண்டு நடித்த போது நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக போலீசில் புகார் அளித்து வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டை பொய் என நாடா படேகர் பேசியிருந்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‘அது எல்லாம் பொய் என்று எனக்குத் தெரியும். அதனால், எனக்கு கோபம் வரவில்லை. படப்பிடிப்பில் என்ன நடந்தது என்ற உண்மை அனைவருக்கும் தெரியும். அப்படி எதுவும் நடக்காதபோது, நான் என்ன சொல்ல வேண்டும்? திடீரென்று யாரோ ஒருவர் நீங்கள் இதைச் செய்தீர்கள், இதைச் செய்தீர்கள் என்று கூறுகிறார்கள். இதுபோன்ற விஷயங்களுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்?’ என்று பேசினார்.
இதற்கு பதில் தரும் வகையில் தனுஸ்ரீ தத்தா நேற்று கூறும் போது, “இப்போது, அவருக்கு பயம் வந்துவிட்டது. பாலிவுட்டில் அவரது ஆதரவாளர்கள் குறைந்துவிட்டனர். அவரை ஆதரித்தவர்கள் எல்லாம் அவரின் குணம் தெரிந்து அவரை ஓரங்கட்டிவிட்டார்கள். அவரது செயல்கள் எப்படிப்பட்டவை என்பது மக்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டது. அதனால் தான், இப்படியெல்லாம் உளறுகிறார். ஆறு வருடத்திற்கு முன் வைத்த குற்றச்சாட்டுக்கு இப்போது பதில் அளித்துள்ளார். நானா படேகர் ஒரு பொய் சொல்லும் நோயுள்ளவர்” என்று கூறினார்.